பண்ருட்டியில் சர்வீஸ் ரோடு அமைக்க 120 கடைகள் அகற்றம்


பண்ருட்டியில் சர்வீஸ் ரோடு அமைக்க 120 கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 6:31 PM GMT)

பண்ருட்டியில் சர்வீஸ் ரோடு அமைக்க 120 கடைகள் அகற்றப்படுகிறது.

பண்ருட்டி, 

பண்ருட்டியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுப்புரம்-மயிலாடுதுறை ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த வழியாக ரெயில்கள் செல்லும்போதெல்லாம் பண்ருட்டியில் ரெயில்வே கேட் மூடப்படும். அந்த சமயத்தில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

ஒரு முறை ரெயில்வே கேட் மூடி திறந்தால், சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சரியாக 30 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடும். இதனால் பண்ருட்டி நகர மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். எனவே ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

அதன்படி ரூ.20 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. ஆனால் மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க போதிய இடம் இல்லாததால், சர்வீஸ் ரோடு அமைக்க வில்லை. மேம்பாலத்தின் இருபுறமும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. முதலில் இழப்பீடு கொடுத்தால்தான், சர்வீஸ் ரோடு அமைக்க இடம் தருவோம் என்று வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் திட்டவட்டமாக அறிவித்தனர். இதையடுத்து கலெக்டர், சப்-கலெக்டர், தாசில்தார், நெடுஞ்சாலைத்துறையினர் என அதிகாரிகள் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார் கள். அதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் தாங்களாகவே தங்களது கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தினர். அதன்படி நேற்று முன்தினம் முதல் சர்வீஸ் ரோட்டிற்காக கடைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வியாபாரிகளும், நெடுஞ்சாலைத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.


இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பண்ருட்டி மேம்பாலத்தின் இருபுறமும் 5½ மீட்டர் அகலத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நில அளவையர் மூலம் குறியிடப்பட்டுள்ள இடம் வரை உள்ள கடைகள் அகற்றப்படுகிறது. மொத்தம் 120 கடைகள் அகற்றப்படும். இந்த பணி முடிந்ததும், விரைவில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படும் என்றார்.

Next Story