லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கடலூர் அரசு மருத்துவமனையில் 60 ஆவணங்கள் பறிமுதல் டாக்டர்களிடம் நாளை விசாரணை
கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 60 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக டாக்டர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நாளை(திங்கட்கிழமை) விசாரணை நடத்த உள்ளனர்.
கடலூர்,
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதுவல்ல பிரச்சினை என்பதும், அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் நிதி தவறாக கையாளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதாக தெரியவந்து உள்ளது.
கடலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மெல்வின்ராஜசிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், திருவேங்கடம் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் மதியம் 12 மணி முதல் இரவு 7.30 மணி வரை சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது மகப்பேறு வார்டு, சி.டி.ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே மையத்தில் இருந்து கணக்கில் வராத 6 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதவிர நோயாளர் நலநிதி ஆவணம், கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை சம்பந்தப்பட்ட ஆவணம், பிரசவம் ஆன பெண்களை வீடுகளுக்கு சென்று விடுவதற்கு வாகன வசதிக்கான ஆவணம், அவசரத்துக்கு மருந்துகள் வாங்கியதற்கான ஆவணங்கள், நோயாளிகளுக்கு இலவச ஆம்புலன்சு வசதி செய்ததற்கான ஆவணம் உள்பட சுமார் 60 ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இந்த ஆவணங்கள் தொடர்பாக கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை(திங்கட்கிழமை) விசாரணைக்காக ஆஜராகுமாறு அரசு மருத்துவமனை துறை தலைவர்களுக்கும், டாக்டர்களுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். அப்போது அவர்களிடம் ஆவணங்களை காண்பித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதில் முறைகேடு செய்தது அம்பலமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிகிறது.
Related Tags :
Next Story