ஆணவ படுகொலையில்: கணவரை இழந்த கவுசல்யா மறுமணம் - பறை இசை கலைஞரை மணந்தார்


ஆணவ படுகொலையில்: கணவரை இழந்த கவுசல்யா மறுமணம் - பறை இசை கலைஞரை மணந்தார்
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 9 Dec 2018 7:45 PM GMT)

ஆணவ படுகொலையில் கணவர் சங்கரை இழந்த கவுசல்யா நேற்று மறுமணம் செய்து கொண்டார். அவர், பறை இசை கலைஞரை மணந்து கொண்டார்.

கோவை, 

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மகன் சங்கர் (வயது 25). இவரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னசாமியின் மகள் கவுசல்யாவும் (22) பொள்ளாச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபம் அடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படை மூலம் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி உடுமலை பஸ் நிலையம் அருகில் பட்டப்பகலில் சங்கரையும், கவுசல்யாவையும் கூலிப்படையினர் வெட்டி சாய்த்தனர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் இறந்து விட்டார். இந்த தாக்குதலில் கவுசல்யாவும் காயம் அடைந்து உயிர் தப்பினார். பட்டப் பகலில் பொது இடத்தில் நடந்த இந்த ஆணவ படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட பின்னர் கவுசல்யா சங்கரின் பெற்றோருடன் உடுமலை அருகே குமரலிங்கத்தில் வசித்து வந்தார். தனக்கு நேர்ந்த சோகத்தை மறக்க அவர் பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டார். தனது கணவர் சங்கர் பெயரில் சமூக நீதி அறக்கட்டளை நடத்தி வந்தார். சாதி ஆணவ படுகொலைக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்தும் அவர் போராடி வந்தார். மேலும் அவர் சங்கர் வீட்டில் அந்த பகுதி மாணவர்களுக்கு பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பறை இசை பயிற்சி அளிக்க கோவையில் உள்ள பறை இசை கலைஞர் சக்தி (27) என்பவர் அடிக்கடி சென்று வந்தார். மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது கவுசல்யாவும் பறை இசை பயிற்சி பெற்றார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்த அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

இது குறித்து சக்தி தனது பெற்றோரிடமும், கவுசல்யா, சங்கரின் பெற்றோரிடமும் தெரிவித்துள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்பேரில் தங்கள் காதல் திருமணத்தை சீர்திருத்த முறையில் நடத்த அவர்கள் விரும்பினார்கள்.

அதன்படி அவர்களின் திருமணம் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகம் பெரியார் படிப்பகத்தில் நேற்றுக்காலை 10 மணிக்கு நடந்தது. இதற்காக பெரியார் படிப்பகத்தின் முன்பு சாமியானா பந்தல் போடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் திருமண உறுதிமொழியை வாசிக்க அதை சக்தியும், கவுசல்யாவும் திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதன்பின்னர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சங்கரின் தந்தை வேலுசாமி மாலையை எடுத்து சக்தியிடமும், சங்கரின் பாட்டி மாரியம்மாள் மாலையை எடுத்து கவுசல்யாவிடம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து பறை இசை முழங்க சுயமரியாதை முறைப்படி இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்ததும் சக்தியும், கவுசல்யாவும் மாலை அணிந்தவாறு திருமணத்துக்கு வந்தவர்களின் மத்தியில் பறை அடித்து மகிழ்ந்தனர்.

கவுசல்யாவை திருமணம் செய்து கொண்ட சக்தியின் சொந்த ஊர் கோவையை அடுத்த வெள்ளலூர் ஆகும். சக்தி விஷூவல் கம்யூனிகேசன் படித்து சில ஆண்டுகள் வெப் டிசைனர் ஆக பணி புரிந்துள்ளார். பின்னர் பறை இசையின் மீது ஆர்வம் கொண்டு நிமிர்வு கலையகம் பறை இசை பயிற்சி பள்ளியை கோவை, சென்னை, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்களில் நடத்தி வருகிறார்.

சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட பின்னர் கவுசல்யாவுக்கு நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த வெலிங்டனில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அங்கு அவர் பணிபுரிந்து வருகிறார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சாதி ஆணவத்தால் தனது காதல் இணையரை இழந்ததை தனது சொந்த சோகமாக மட்டும் சுருக்கிப் பார்க்காமல் சமூகக் கட்டமைப்பு தான் இதற்கு காரணம் என்று செயல்பட்டு வந்த சகோதரி கவுசல்யா - பறை இசைக் கலைஞர் சக்தியை வாழ்வு இணையராக தேர்ந்தெடுத்துக் கொண்டதை அறிந்து மகிழ்கிறேன். இந்நிகழ்வை உடுமலை சங்கரின் தந்தையும், தம்பியும், பாட்டியும் பங்கேற்றே நடத்தி வைத்திருப்பது கவுசல்யாவின் பொது நோக்கத்துக்கு கிடைத்த பாராட்டு. தமிழ் சமூக வார்ப்புகளான கவுசல்யா - சக்தி இருவரும் இல்வாழ்விலும், சமூக வாழ்விலும் சிறந்து விளங்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Next Story