கள்ளக்காதலுக்கு இடையூறு: கூலிப்படையை ஏவி விஷ ஊசிபோட்டு தொழிலாளியை கொன்ற மனைவி போச்சம்பள்ளி அருகே பயங்கரம்
போச்சம்பள்ளி அருகே கொழுந்தனுடனான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கூலிப்படையை ஏவி விஷ ஊசி போட்டு மனைவியே கொலை செய்தார். இது தொடர்பாக மனைவி-கள்ளக் காதலன் உள்பட 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜம்புகுட்டப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சோனியா (25). இவர்களுக்கு ஜீவா (7), ஹரி (4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சோனியாவுக்கும், அவரது தங்கை கணவரான சிவக்குமார் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சிவக்குமார் சந்தூர் அருகே உள்ள மகாதேவகொல்லஅள்ளியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் ராஜலிங்கத்திற்கு தெரியவந்தது. அவர் மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ராஜலிங்கம் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். தனது கணவர் குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சோனியா கூறினார். இதை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது ராஜலிங்கத்தின் குழந்தைகள் ஜீவா, ஹரி ஆகியோர் தனது தந்தையை சிலர் சேர்ந்து தாக்கியதாகவும், அவர்கள் கழுத்தை இறுக்கி கொன்றதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து சோனியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையை ஏவி தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் சோனியா அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
எனக்கும், எனது தங்கையின் கணவர் சிவக்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. நாங்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருப்போம். இது எனது கணவருக்கு தெரியவந்தது. எங்களது கள்ளக்காதலை அவர் கண்டித்தார். இது குறித்து நான் எனது கள்ளக் காதலன் சிவக்குமாரிடம் கூறினேன். எனது கணவர் உயிருடன் இருக்கும் வரையில் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது. எனவே அவரை கொலை செய்து விட்டு பின்னர் நாம் உல்லாச வாழ்க்கை வாழலாம் என்று கூறினேன்.
அதன்படி சிவக்குமார், திருவண்ணாமலையைச் சேர்ந்த கூலிப்படையினர் 4 பேரை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தார். அந்த நேரம் எனது கணவர் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் வைத்தே எனது கணவரை கொன்று விட திட்டம் போட்டோம். அதன்படி நான் எனது கணவருக்கு போன் செய்து, நமது வீட்டுக்கு உறவினர்கள் வந்துள்ளார்கள். எனவே உடனே வீட்டுக்கு வாருங்கள். வரும்போது ஜூஸ் வாங்கி வாருங்கள் என்று கூறினேன்.
அதன்படி எனது கணவரும் வீட்டுக்கு ஜூஸ் வாங்கி வந்தார். அந்த நேரம் எனது வீட்டில் இருந்த சிவக்குமார் மற்றும் அவருடன் வந்த 4 பேரும் எனது கணவரை சுற்றி வளைத்தனர். அவர்கள் எனது கணவரின் கழுத்தை பிடித்து இறுக்கினார்கள். மேலும் தாங்கள் கொண்டு வந்த விஷ ஊசியை எனது கணவருக்கு போட்டனர். இதில் அவர் மயங்கி விழுந்து விட்டார். பின்னர் அவர் கழுத்தில் துணியால் இறுக்கி அவரை தூக்கில் தொங்க விட்டோம். இதன்பிறகு சிவக்குமார் உள்ளிட்ட 5 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இரவு நான் எனது கணவர் குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி வாசலில் நின்றவாறு கூச்சலிட்டேன். ஆனால் எனது குழந்தைகள் கணவரை நாங்கள் கொலை செய்ததை பார்த்து அக்கம் பக்கத்தில் கூறியதால் நாங்கள் மாட்டிக் கொண்டோம்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து சோனியாவை போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜலிங்கத்தை கொலை செய்து தப்பி ஓடிய சோனியாவின் கள்ளக்காதலன் சிவக்குமார், அவருடன் வந்த கூலிப்படையான திருவண்ணாமலையைச் சேர்ந்த அஜீத், பாலாஜி, காளிமுத்து ஆகிய 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
இதில் தொடர்புடைய ஒருவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கொழுந்தனுடன் இருந்த கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை மனைவியே கூலிப்படையை ஏவி, விஷ ஊசி போட்டு கொலை செய்த சம்பவம் போச்சம்பள்ளி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story