நெல்லையில்: இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் - ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கோரிக்கை


நெல்லையில்: இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் - ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Dec 2018 10:15 PM GMT (Updated: 10 Dec 2018 9:22 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை, 


உலக மனித உரிமை தினத்தையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஒருங்கிணைப்பாளர் பீட்டர் தலைமை தாங்கினார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல்ஜப்பார், தமிழ்நாடு உழைப்பாளர் சங்க மையத்தின் நிர்வாகி ராஜமாணிக்கம், தாமிரபரணி பாதுகாப்பு இயக்க நிர்வாகி சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த அமைச்சரவை தீர்மானத்திற்கு கவர்னர் விரைந்து முடிவு எடுத்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. சங்கர்நகர் செயலாளர் முருகன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், ஜனநாயக தி.மு.க. தலைவர் சரவணன், கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story