உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்
உலக அளவில் அதிக பொருட்செலவில் இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மகளின் திருமணம் ஆடம்பரமாக நடக்கிறது.
மும்பை,
கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட விஷயம் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மகளின் திருமணம் தான். இந்த திருமணம் குறித்த ஒவ்வொரு தகவல்களையும் தெரிந்து கொண்டு மக்கள் வாய் அடைத்து போய் உள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பிரபல கட்டுமான நிறுவன அதிபர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிராமலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
திருமணத்திற்கு அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஆன செலவு மட்டும் ரூ.3 லட்சம் என்றால் மற்ற செலவுகளை பற்றி கேட்கவே வேண்டாம்.
37 வருடத்திற்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியரின் திருமணம் ஆடம்பரமாக அதிக செலவில் நடந்தது. அதன்பிறகு உலக அளவில் அதிக செலவில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் ரூ.722 கோடியில் நடப்பதாக கூறப்படுகிறது.
இதில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் ஏரிகள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் நகரமான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடந்தது. மன்னர் குடும்பங்களில் நடக்கும் திருமணத்தை மிஞ்சிடும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக உதய்பூர் நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. விருந்தினர்களுக்காக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் உதய்பூரில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களையும் வாடகைக்கு எடுத்து இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், தொழில் அதிபர்கள் ரத்தன் டாடா, குமாரமங்கலம் பிர்லா, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அகிலேஷ் யாதவ், நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவர்களை அழைத்து செல்வதற்கு மட்டும் 50 தனி விமானங்கள், 1500-க்கும் மேற்பட்ட கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருந்தன.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக பிரபல பாப் பாடகி பியான்சேவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதுவரை அவர் எந்த திருமண நிகழ்ச்சியிலும் பாடல் பாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இஷா அம்பானி- ஆனந்த் பிராமல் திருமணம் இன்று (புதன்கிழமை) மும்பையில் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட அன்டிலா வீட்டில் நடக்கிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதி மும்பை ஒர்லி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பங்களா வீட்டில் குடியேறுகிறார்கள். வைரத்தால் ஜொலிக்கும் அறை, கோவில், நீச்சல் குளம், வாகன பார்க்கிங் செய்ய மட்டும் 3 தளங்கள் என மிக பிரமாண்டமாக இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. பெரும் செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்த இஷா அம்பானி, திருமணத்துக்கு பிறகும் சொகுசாக வாழ வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த பங்களாவை ஆனந்த் பிரமாலின் தந்தை அஜய் பிராமல் பிரமாண்டமாக வடிவமைத்து மருமகளுக்கு பரிசாக வழங்குகிறார்.
Related Tags :
Next Story