சூலூர் அருகே முப்பெரும் விழா: ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூலூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
சூலூர்,
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா, கொடியேற்று விழா மற்றும் விவசாய சங்க தலைவர்களின் படத்திறப்பு விழா என முப்பெரும் விழா சூலூர் தாலுகா அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். இதை தொடர்ந்து மறைந்த விவசாய சங்க தலைவர்களின் படங்களை ஆர்.கனகராஜ் எம்.எல்.ஏ., கோவை மாநகர முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-
தமிழக அரசு விவசாயம் மட்டுமின்றி அனைத்து துறையிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்க முயற்சி செய்து வருகிறது. மேலும் விவசாயிகளின் பயிர் உற்பத்தி திறன் மற்றும் மகசூல் அதிகரிப்பது குறித்து தொலைநோக்கு பார்வையோடு செயல்படுகிறது.
மேலும் விவசாயிகள் கோரிக்கையான பால் விற்பனை மானியம், விசைத்தறி பிரச்சினைகள், கள் இறக்க தடை நீக்குதல், ஆனைமலை நல்லாறு திட்டம், தேங்காய் விலையை அரசே நிர்ணயம் செய்தல் போன்ற கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறி அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்- அமைச்சர் உத்தரவுபடி 19 நாட்கள் நானும் மற்ற அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கியிருந்து நிவாரண பணிகளை மேற்கொண்டோம். கஜா புயலின் போது தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அந்த பகுதிகளில் உள்ள எந்த மீனவருக்கும், உயிர் சேதம் ஏற்படவில்லை. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையின் பேரில் தற்போது 28 கோடி ரூபாய் செலவில் சூலூர் பகுதியில் திருச்சி சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் விவசாயிகள் சங்க பிரசார குழுத்தலைவர் மணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story