தலா ரூ.50 லட்சம் செலவில் 5 இடங்களில் நவீன ஆவின் பாலகம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்


தலா ரூ.50 லட்சம் செலவில் 5 இடங்களில் நவீன ஆவின் பாலகம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 14 Dec 2018 11:00 PM GMT (Updated: 14 Dec 2018 6:09 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் தலா ரூ.50 லட்சம் செலவில் 5 இடங்களில் நவீன ஆவின் பாலகம் அமைக்கப்பட உள்ளதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி, 

ஆவின் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை முன்னிலை வகித்தார். நெல்லை ஆவின் பொதுமேலாளர் ஸ்ரீரெங்கநாததுரை வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குஜராத் பால் உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தில் இருந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பால் உற்பத்தியை பெருக்குவதற்காக இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகளை வழங்கினார். அதன்பேரில் தற்போது தமிழ்நாடு பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. இதனால் வெண்மை புரட்சி ஏற்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி ஆவின் நிறுவனத்தில் தற்போது 72 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 42 ஆயிரத்து 500 லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை உயர்த்த வேண்டும். பால் உற்பத்தியை பெருக்குவதற்காக கால்நடைகளுக்கு அரசு தீவனம் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சைக்கிள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தனியாருக்கு சற்றும் குறைவு இல்லாமல் ஊக்கத்தொகை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பால் 100 சதவீதம் சுத்தமான பால் ஆகும். ஆவின் பால் பூத்களுக்கு தேவையான பொருட்கள் உடனடியாக வழங்கப்படும். எஸ்.எம்.எஸ். கொடுத்தாலே பால் பொருட்களை வினியோகம் செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தலா ரூ.50 லட்சம் செலவில் 5 இடங்களில் நவீன ஆவின் பாலகம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நெல்லை, தூத்துக்குடி ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் 1 லட்சம் லிட்டராக உயர்த்தவும், விற்பனையை 42 ஆயிரத்து 500-ல் இருந்து 60 ஆயிரம் லிட்டராக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் கொள்முதல் விலை உயர்த்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் நல்ல அறிவிப்பை தருவார். ஆவின் பால் பூத்களில் ஆவின் தவிர மற்ற பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சத்துணவில் மாணவர்களுக்கு பால் வழங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை பேசும் போது, ‘ஆவின் உற்பத்தி பொருட்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 18 ஆயிரத்து 250 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை 30 ஆயிரம் லிட்டர் வரை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பால் விற்பனை அதிகமாக உள்ளது. அதே போன்று ஆவின் பால் விற்பனையையும் அதிகரிக்க வேண்டும்’ என்று கூறினார்.

கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:- ஆவின் தரமான பாலை விற்பனை செய்கிறது. தனியார் பால் நிறுவனங்கள் லாப நோக்கோடு தொழில் செய்கின்றன. ஆவின் நிறுவனம் லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் வகையில் இயங்கி வருகிறது. நெல்லை, தூத்துக்குடி ஆவின் நிறுவனத்தில் விற்பனையாகும் பால் தவிர சுமார் 10 ஆயிரம் லிட்டர் பால் மதிப்பு கூட்டுவதற்காக ஈரோட்டுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி ஆவின் நிறுவனத்துக்கு வருமானம் இல்லை. இதனால் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது உள்ள ஆவின் பாலில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா, சேவை குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கலாம். அதனை களைந்து நல்ல சேவையை அளிக்க தயாராக உள்ளோம். ஆவின் பாலுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் மற்றும் ஆவின் நிறுவன அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story