சங்கராபுரம், திண்டிவனம் பகுதி உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


சங்கராபுரம், திண்டிவனம் பகுதி உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 14 Dec 2018 11:00 PM GMT (Updated: 14 Dec 2018 10:48 PM GMT)

சங்கராபுரம், திண்டிவனம் பகுதி உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சங்கராபுரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின்படி வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரம் மற்றும் பூச்சி மருந்து கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு உரக் கடையில் வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) செல்வராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது விற்பனை உரிமம், பொருள் இருப்பு, விலை பட்டியல், காலாவதியான பொருட்கள் உள்ளதா, தரமான உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்யப்படுகிறதா, விற்பனை பட்டியல் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது வேளாண்மை அலுவலர் கிருஷ்ணகுமாரி, விவசாய பிரதிநிதி நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் மூங்கில்துறைப்பட்டு, புதுப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உரக்கடைகளிலும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருக்கோவிலூர் வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி, வேளாண்மை அலுவலர் லாவண்யா, முன்னோடி விவசாயி கடவம்பாக்கம் மணி ஆகியோர் அடங்கிய குழுவினர் திண்டிவனம் அருகே ஒலக்கூர் வட்டாரத்தில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது பூச்சி மருந்து, உர உரிமங்கள் உரிய முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளனவா, சில்லரை உர விற்பனை அனைத்தும் எந்திரங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்தனர். மேலும் காலாவதியான பூச்சிமருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும், உரங்களின் இருப்பு விவரம் மற்றும் போலி உரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது ஒலக்கூர் வேளாண்மை அலுவலர் பிரபு சங்கர் உடனிருந்தார்.

Next Story