பிளாஸ்டிக்கை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்துங்கள் கலெக்டர் பிரபாகர் அறிவுரை


பிளாஸ்டிக்கை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்துங்கள் கலெக்டர் பிரபாகர் அறிவுரை
x
தினத்தந்தி 15 Dec 2018 11:00 PM GMT (Updated: 15 Dec 2018 4:28 PM GMT)

பிளாஸ்டிக்கை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்துங்கள் என்று கலெக்டர் பிரபாகர் அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாசுகட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது குறித்தும் விளக்கி பேசினார்கள்.

கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் 110 விதியின் கீழ் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு 1.1.2019 முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தேனீர் கோப்பைகள், தம்ளர்கள், பிளாஸ்டிக் தூக்கு பைகள் (கேரிபேக்), பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக மாற்று பொருட்களான பேப்பர் ரோல், வாழை இழை, பாக்கு மட்டைகள், தாமரை இழை, கண்ணாடி, உலோக டம்ளர்கள், பேப்பர் ஸ்ட்ரா, துணி, காகிதம், சணல் பைகள், காகித கொடிகள், சில்வர் குடுவை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை வியாபாரிகள், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும். மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வணிகர் சங்கங்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்புகள், மூலமாக பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அதன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எவை எவை என துண்டு பிரசுங்களின் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் ஆங்காங்கே அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்். மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களான வாரசந்தை, தின சந்தை, டீ கடைகள், மீன் மார்க்கெட், மருந்து கடைகள், திருமண மண்டபங்கள், பல் பொருள் அங்காடிகள், பள்ளி, கல்லூரிகள், அனைத்து தொழிற் நிறுவனங்கள், ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் தடை மற்றும் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகள் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் பழனிசாமி, நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், துணை இயக்குனர் டாக்டர் பிரியா ராஜ், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வெங்கடேஷ், அனைத்து துறை அலுவலர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வணிக சங்க பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்பினர் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story