கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு


கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 18 Dec 2018 3:45 AM IST (Updated: 17 Dec 2018 10:11 PM IST)
t-max-icont-min-icon

கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான வாலிபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

திருவள்ளூர்,

கும்மிடிப்பூண்டியை அடுத்த துராபள்ளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்பு என்ற அன்பழகன்(வயது 30). கடந்த 22-8-18 அன்று வேலை விஷயமாக ஊத்துக்கோட்டை பஜாருக்கு வந்த அன்பு, அங்குள்ள ராஜ்குமார் என்பவரது கடையில் சிகரெட் மற்றும் தண்ணீர் பாக்கெட் வாங்கினார்.

ஆனால் அதற்கான பணத்தை தராததால், ராஜ்குமார் பணம் தரும்படி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அன்பு, கடைக்காரர் ராஜ்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்தார்.

மேலும் கடையில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினார். அத்துடன் ராஜ்குமாருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.

இது குறித்த புகாரின்பேரில் ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் கைதான அன்பு மீது ஏற்கனவே 2 வழிப்பறி, 3 கொலை வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அன்புவை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், அன்புவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும்படி நேற்று உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு நகலை புழல் சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

Next Story