தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை கண்டித்து வீடுதோறும் நாளை கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு


தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை கண்டித்து வீடுதோறும் நாளை கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 10:00 PM GMT (Updated: 17 Dec 2018 5:55 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை கண்டித்து நாளை (புதன்கிழமை) வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் அறிவித்தார்கள்.

தூத்துக்குடி,

இதுகுறித்து அந்த கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல் அரிராகவன், மகேஷ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. அதில், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உள்ளது. இது பசுமை தீர்ப்பாயமா? அல்லது பசுமையை அழிக்கும் தீர்ப்பு வழங்கும் தீப்பாயமா? என்று சந்தேகம் உள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. அதோடு மக்கள் கூட்டமைப்பும் சேர்ந்து வழக்கை நடத்தும். இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இறந்த 13 பேர் கனவு, லட்சியம் தோல்வி அடைந்து உள்ளது. இதனால் தீர்ப்பை நிராகரிக்கிறோம்.

தீர்ப்பாயத்தின் உத்தரவை கண்டித்து நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களில் உள்ள வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்துகிறோம். அனைத்து கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவாக, உறுதுணையாக இருக்க வேண்டும்.

வணிகர் சங்கங்கள் முடிவு செய்து கடைகளில் கருப்புக்கொடி கட்ட வேண்டும். தமிழகம் முழுவதும் நாளை காலை அனைத்து இடங்களிலும் கருப்புக்கொடி ஏற்றுவதற்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க கோரிக்கை விடுக்கிறோம்.

தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரை வருகிற 21-ந் தேதி மக்கள் கூட்டமைப்பு சார்பில் சந்திக்க முடிவு செய்து உள்ளோம். அதில் மக்கள் கூட்டமைப்பை சேர்ந்து உள்ள அனைத்து கிராம மக்களும் செல்ல உள்ளோம். மாவட்ட கலெக்டர் மக்களை சந்தித்து பேச வேண்டும்.நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டு 2 விதமான போராட்டங்களை நடத்துகிறோம். கருப்புக்கொடி ஏற்றுவதற்கு போலீஸ் எங்களை தடுத்தால், மக்கள் வீட்டின் முன்பு, தெரு முன்பு கூடி எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம். ஆகையால் போலீசார் கருப்புக்கொடி போராட்டத்துக்கு எங்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story