பெலகாவியில் நடந்த சட்டமன்ற காங். கட்சி கூட்டம் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி புறக்கணிப்பு 4 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை


பெலகாவியில் நடந்த சட்டமன்ற காங். கட்சி கூட்டம் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி புறக்கணிப்பு 4 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை
x
தினத்தந்தி 18 Dec 2018 10:30 PM GMT (Updated: 18 Dec 2018 10:23 PM GMT)

பெலகாவியில் நடைபெற்ற சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியும், 4 எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பெலகாவி, 

பெலகாவியில் நடைபெற்ற சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியும், 4 எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண சவுதாவில் நடந்து வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்தராமையா தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெலகாவி சுவர்ண சவுதாவில் நேற்று நடைபெற்றது.

இதில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்- மந்திரி பரமேஸ்வர், மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்து கொண்டனர்.

11 பேருக்கு மந்திரி பதவி

இதில் எம்.எல்.ஏ.க்கள் பேசியதாவது:-

வட கர்நாடகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் தேர்வாகி உள்ளனர். அதே அளவுக்கு தான் தென் கர்நாடக பகுதியிலும் எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தென் கர்நாடகத்தில் 11 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வட கர்நாடகத்தில் 5 பேருக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் பாரபட்சம் பற்றி வட கர்நாடக மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

காங்கிரசுக்கு பாதிப்பு

இந்த விஷயத்தை பா.ஜனதாவினர் மக்களிடம் சொல்லி, அவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். இதனால் அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதி. இந்த பாரபட்சத்தை உடனே சரிசெய்ய வேண்டும்.

மந்திரிசபை விரிவாக்கத்தை தள்ளிப்போடுவது சரியல்ல. திட்டமிட்டப்படி வருகிற 22-ந் தேதி மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும். மந்திரிசபையில் காலியாக உள்ள காங்கிரசின் 6 இடங்களையும் நிரப்ப வேண்டும்.

புறக்கணிக்கிறது

அந்த 6 இடங்களையும் வட கர்நாடகத்திற்கு வழங்க வேண்டும். துமகூரு மாவட்டத்தில் காங்கிரசுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். அதில் ஒருவருக்கு துணை முதல்-மந்திரி பதவியும், இன்னொருவருக்கு மந்திரி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

பல்லாரியில் 6 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் ஒருவருக்கு கூட மந்திரி பதவி கிடைக்கவில்லை. வேறு ஒருவர் இங்கு வந்து நிர்வாகம் செய்கிறார். இங்குள்ள மக்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது?. மேலும் அரசியல் ரீதியாக பார்த்தால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இந்த அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

சந்திக்க முடிவது இல்லை

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கூட்டணி அமைத்துள்ளோம். பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுக் கொடுத்துள்ளோம்.

நமக்கு 80 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனாலும் இது நமது அரசு என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை. நமது கட்சியை சேர்ந்த துணை முதல்-மந்திரி பரமேஸ்வரை சந்திக்க முடிவது இல்லை. அவரது அலுவலகத்திற்கு சென்றால் அவரை பார்க்க கூட முடிவது இல்லை.

கூட்டணி ஆட்சிக்கு சிக்கல்

நாங்கள் யாரிடம் முறையிடுவது?. குறைந்தது ஒரு மணி நேரமாவது எம்.எல்.ஏ.க்களை சந்திக்்க பரமேஸ்வர் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எங்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க வேண்டும்.

அதை முதல்-மந்திரியின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். இல்லாவிட்டால் நிலைமை கைமீறி சென்றுவிடும். இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதற்கு நாங்கள் ெபாறுப்பாக மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

மந்திரி புறக்கணிப்பு

இந்த கூட்டத்தில் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.பட்டீல், ராமலிங்கரெட்டி, துகாராம், நாகேந்திரா ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.. சுதாகர் எம்.எல்.ஏ. முன் அனுமதியை பெற்று இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதற்கிடையே மந்திரி பதவி கிடைக்காததால், அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பி.சி.பட்டீல், எம்.டி.பி.நாகராஜ், சி.எஸ்.சிவள்ளி, எச்.கே.பட்டீல், சதீஷ் ஜார்கிகோளி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மந்திரிசபை விரிவாக்கம்

இந்த கூட்டத்தில் பேசிய சித்தராமையா, திட்டமிட்டப்படி வருகிற 22-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். யாரும் கட்சிக்கு எதிராக செயல்பட வேண்டாம். உங்களின் பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசியதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கூட்டங்களை ெதாடர்ந்து புறக்கணித்து வரும் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, இந்த நடவடிக்கை பாயும் என்று சொல்லப்படுகிறது.

Next Story