திருச்சி அருகே ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள் நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது


திருச்சி அருகே ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள் நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 20 Dec 2018 4:15 AM IST (Updated: 20 Dec 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே உள்ள நவல்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வரும் காளைகளுக்கு நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி,

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை என்ற வடிவில் சோதனை வந்த போது ஒட்டுமொத்த தமிழகமே கிளர்ந்தெழுந்தது. மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்துக்கு எதிராக கொந்தளித்த இளைஞர்கள் சென்னையை போல் திருச்சியிலும் கோர்ட்டு அருகே ஒன்று கூடி தொடர் போராட்டம் நடத்தி வரலாற்றுப்பதிவில் இடம் பிடித்தார்கள்.

மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு திருவிழா போல் திருச்சி மாவட்டம் சூரியூர், நவல்பட்டு, நவலூர் குட்டப்பட்டு, திருவெறும்பூர், துவாக்குடி, ஆவாரங்காடு, புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் பிரபலமானவை. தை பிறந்தாலே ஜல்லிக்கட்டு போட்டிகளும் களை கட்ட தொடங்கி விடும். பெரும்பாலான இடங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவும், மாட்டுப்பொங்கல் தினத்தன்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் திருவிழா போல் நடைபெறுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க வரும் காளையர்களுடன் மோதுவதற்கான காளைகளை தயார் படுத்தும் பணி அதாவது அவற்றிற்கு பயிற்சி அளிக்கப்படுவது இப்போதே தொடங்கி விட்டது. திருச்சி அருகே உள்ள நவல்பட்டு கிராமத்தில் 200- க்கும் மேற்பட்ட காளை மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்தி வருகிறார்கள் அங்குள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், கிராமத்து இளைஞர்களும்.

நவல்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களில் ஒருவரான துளசிதாசன் என்பவர் 8 ஜல்லிக்கட்டு காளைகளை பராமரித்து வருகிறார். இந்த காளைகளுக்கு குளத்தில் நீச்சல் பயிற்சி, மண்ணை கிளறி சீறிப்பாய பயிற்சிகள், காளைகளை சீண்டி கோபப்பட வைப்பது போன்ற பயிற்சிகள் அங்குள்ள இளைஞர்களால் அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக துளசிதாசன் கூறுகையில் ‘எனக்கு தற்போது 54 வயதாகிறது. 13 வயதில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை பராமரித்து வருகிறேன். ஒரு காளைக்கு தினமும் சுமார் 250 ரூபாய் வரை பராமரிப்பு செலவாகும். வழக்கமாக அளிக்கப்படும் உணவு தவிர பச்சரிசி, சோளமாவு, கோதுமை தவிடு, துவரம் பருப்பு பொட்டு ஆகியவற்றை கொடுப்போம். என்னிடம் இருக்கும் காளைகளில் 4 காளைகள் இதுவரை பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் எல்லாம் பிடிக்க வந்த இளைஞர்களை தூக்கி வீசி துவம்சம் செய்து விட்டு பரிசுகளை அள்ளி வந்துள்ளன. தென்னலூர் ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் 29-ந்தேதி நடைபெற உள்ளது. அந்த போட்டியில் எனது காளைகளை களம் இறக்குவதற்காக ஒரு மாதகாலமாக தினமும் பயிற்சி அளித்து வருகிறேன்’ என்றார். 

Next Story