“கனவுகளுக்கு பெற்றோர் துணை நின்றால் குழந்தைகள் சாதிப்பார்கள்” ஐ.பி.எல். போட்டிக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் வருணின் தந்தை பேட்டி


“கனவுகளுக்கு பெற்றோர் துணை நின்றால் குழந்தைகள் சாதிப்பார்கள்” ஐ.பி.எல். போட்டிக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் வருணின் தந்தை பேட்டி
x
தினத்தந்தி 20 Dec 2018 10:45 PM GMT (Updated: 20 Dec 2018 6:50 PM GMT)

கனவுகளுக்கு பெற்றோர் துணை நின்றால் குழந்தைகள் சாதிப்பார்கள் என ஐ.பி.எல். போட்டிக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் வருணின் தந்தை கூறினார்.

கும்பகோணம்,

இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஐ.பி.எல். வீரர்கள், ஏலம் மூலமாக அணிகளுக்கு தேர்வு செய்யப்படுவது வழக்கம். சமீபத்தில் நடந்த ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி ரூ.8 கோடியே 40 லட்சத்துக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

சுழற்பந்து வீச்சாளரான இவர், தமிழக அளவிலான டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரை பாந்தர்ஸ் அணிக்காகவும், விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணிக்காகவும் அபாரமாக பந்து வீசியவர். சிக்கனமாக பந்து வீசுவதுடன், ஆப் பிரேக், லெக் பிரேக், கூக்ளி, கேரம் உள்பட 7 விதமான பந்து வீச்சு முறைகளில் அசத்தக்கூடியவர்.

வருணின் தந்தை வினோத், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். ஐ.பி.எல். போட்டிக்கு தனது மகன் தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே வருணுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு. உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தபோது கடுமையாக உழைப்பதை பார்த்திருக்கிறேன். சிறந்த கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்பது அவருடைய கனவாக உள்ளது. அந்த கனவுக்கு நானும், எனது மனைவியும் எப்போதும் துணை நிற்போம்.

பெற்றோர், தங்கள் குழந்தைகளின் கனவுக்கு துணை நின்றால் அவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள். எந்த துறையில் பிரகாசிக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதற்கு துணை நிற்க வேண்டும். ஐ.பி.எல். போட்டியில் ரூ.8 கோடியே 40 லட்சத்துக்கு ஏலம் போனது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் அவருக்கு கூடுதல் பொறுப்பு வந்திருப்பதாக உணர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story