கூடலூர் அருகே குடியிருப்பில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்டனர்


கூடலூர் அருகே குடியிருப்பில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்டனர்
x
தினத்தந்தி 20 Dec 2018 10:30 PM GMT (Updated: 20 Dec 2018 9:46 PM GMT)

கூடலூர் அருகே குடியிருப்பில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்டனர்.

கூடலூர்,

கூடலூரில் அடர்ந்த வனப்பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் உள்ளன. இது தவிர முதுமலை புலிகள் காப்பகமும் அருகில் உள்ளதால், வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வந்து விடுகிறது. காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் மலைப்பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு நாடுகாணி பொன்னூரில் குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்தனர். உடனே இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேட்டை தடுப்பு காவலர்கள் தமிழ், ராஜ்கமல் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இரவு நேரம் என்பதால் குடியிருப்புக்குள் பதுங்கிய மலைப்பாம்பை உடனடியாக பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு, 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை அடர்ந்த காட்டுக்குள் நள்ளிரவிலேயே கொண்டு சென்று விட்டனர். அதன்பின்னரே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் பொன்னூர் பகுதியில் இரவில் பரபரப்பு காணப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

கோடை காலம் தொடங்கி விட்டதால் பகலில் நன்கு வெயிலும், இரவில் பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதனால் பாம்புகள் சுதந்திரமாக வெளியே நடமாடுகிறது. நாடுகாணி, கீழ்நாடுகாணி உள்ளிட்ட வனப்பகுதியில் மலைப்பாம்பு அதிகளவு உள்ளது. இதனால் அடிக்கடி ஊருக்குள் மலைப்பாம்புகள் புகுந்து விடுகின்றன. இரவில் வளர்ப்பு பிராணிகளை பிடித்து சாப்பிடுவதற்காக மலைப்பாம்பு ஊருக்குள் வந்து இருக்கலாம்.

இங்கு பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் குடியிருப்புக்குள் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது. வனவிலங்குகள் ஊருக்குள் வந்தால், பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவ்வாறு தகவல் கிடைத்தால் உடனடியாக நேரில் வந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story