டெல்லியில் காங். தலைவர்கள் ராகுல்காந்தியை சந்திப்பதில் தாமதம் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று நடைபெறுமா?


டெல்லியில் காங். தலைவர்கள் ராகுல்காந்தியை சந்திப்பதில் தாமதம் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று நடைபெறுமா?
x
தினத்தந்தி 21 Dec 2018 10:30 PM GMT (Updated: 21 Dec 2018 9:36 PM GMT)

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள், ராகுல்காந்தியை சந்திப்பதில் தாமதமாகி வருகிறது.

பெங்களூரு, 

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள், ராகுல்காந்தியை சந்திப்பதில் தாமதமாகி வருகிறது. இதனால் கர்நாடக மந்திரி சபை இன்று (சனிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே சில மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

8 இடங்கள் காலி

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்து 7 மாதங்கள் ஆகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். மந்திரிசபையில் காங்கிரசுக்கு 6 இடங்கள், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 2 இடங்கள் என மொத்தம் 8 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலி இடங்களை நிரப்பும் வகையில், கர்நாடக மந்திரிசபை 22-ந் தேதி (இன்று) விரிவாக்கம் செய்யப்படும் என்று கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மந்திரிசபை விரிவாக்கம்

மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலர், தற்போதைக்கு மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறாது என்று சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் தினேஷ் குண்டுராவ் ஆகியோர், திட்டமிட்டபடி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று உறுதியாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க கா்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

ராகுல்காந்தியை சந்திப்பதில் தாமதம்

அங்கு கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலை சந்தித்து பேசிய காங்கிரஸ் தலைவர்கள், மந்திரிசபையில் இருந்து சிலரை நீக்குவது குறித்தும், புதிய மந்திரிகளை நியமனம் செய்வது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினர். பகல் 1 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை 5 மணி வரை 4 மணி நேரம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடக தலைவர்கள் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். ஆனால் அவர் ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்தியபிரதேச மாநிலங்களின் மந்திரி சபை விரிவாக்கம் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசித்து வருகிறார். இதனால் ராகுல்காந்தியை கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பதில் தாமதம் ஆகி வருகிறது.

திட்டமிட்டபடி நடைபெறுமா?

இதற்கிடையே மூத்த எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கரெட்டி, எச்.கே.பட்டீல், எம்.பி.பட்டீல், ரோஷன் பெய்க் ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் 4 பேருமே சித்தராமையா மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்கள். அத்துடன் புதிய முகங்கள் சிலருக்கும் மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கவர்னர் மாளிகைக்கு நேற்று மாலை 6 மணி வரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் மந்திரிசபை விரிவாக்கம் திட்டமிட்டபடி இன்று(சனிக்கிழமை) நடைபெறுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

வாரிய தலைவர் பதவி

கூட்டணி கட்சிகளுக்கு எதிராக அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்குவதை தடுக்கும் பொருட்டு, மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் அதே நாளில் காங்கிரை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story