பொள்ளாச்சி அருகே கோமங்கலத்தில் பி.ஏ.பி. கிளை கால்வாயை உடைத்து தண்ணீர் திருட்டு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்


பொள்ளாச்சி அருகே கோமங்கலத்தில் பி.ஏ.பி. கிளை கால்வாயை உடைத்து தண்ணீர் திருட்டு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Dec 2018 4:00 AM IST (Updated: 22 Dec 2018 10:07 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே கோமங்கலத்தில் பி.ஏ.பி. கிளை கால்வாயை உடைத்து தண்ணீர் திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


பொள்ளாச்சி,

பரம்பிக்குளம் அணையில் இருந்து சுரங்கபாதை மூலம் தண்ணீர் சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு வரப்படுகின்றது. அங்கு மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

4 மண்டலமாக பிரித்து தண்ணீர் பாசனத்திற்கு வழங்கப்படுகின்றது. தற்போது 2-ம் மண்டலத்தில் 5-வது சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோமங்கலத்தில் பி.ஏ.பி. கிளை கால்வாயை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் 3 இடங்களில் உடைத்து தண்ணீரை திருடி உள்ளனர். இதனால் கால்வாய் அருகில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து கோமங்கலம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

சீலக்காம்பட்டியில் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் இருந்து கோமங்கலம் கிளை கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படுகின்றது. இந்த கால்வாய் 12 கிலோ மீட்டர் தூரம் சென்று கடைமடை பகுதியான கோழிக்குட்டையில் முடிகிறது. இந்த கால்வாய் மூலம் 2,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது 2-ம் மண்டலத்தில் 5-வது சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

ஒரு சுற்றுக்கு 7 நாட்கள் வீதம் 20 நாட்கள் போதிய இடைவெளி விட்டு தண்ணீர் திறக்கப்படுகின்றது. இந்த நீரை பயன்படுத்தி தற்போது 1,300 ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்யப்படுகின்றன. தென்னை, மக்காள சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் பி.ஏ.பி.கால்வாயின் 10-வது கிலோ மீட்டர் தூரத்தில் அரை கிலோ மீட்டர் இடைவெளியில் 3 இடங்களில் உடைத்து தண்ணீரை திருடி உள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிந்ததும், விவசாயிகள் சென்று கற்கள், மணலை போட்டு உடைப்பை தற்காலிமாக சரிசெய்தோம். இந்த தண்ணீரை பி.ஏ.பி. திட்டத்தில் சேராத பகுதிகள் மற்றும் குளம், குட்டைகளுக்கு கொண்டு சென்று உள்ளனர். ஏற்கனவே 3-வது சுற்றின் போதும் கால்வாயை உடைத்து தண்ணீர் திருடப்பட்டது.

தற்போது திருடப்பட்ட தண்ணீரை கொண்டு சுமார் 500 ஏக்கர் பாசனம் செய்ய முடியும். தண்ணீர் திருட்டு குறித்து அதிகாரிகளுக்கு காலை 9 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தண்ணீர் திருடப்படுகின்றது. அதிகாரிகளும் தண்ணீர் திருட்டை கண்டுகொள்வதில்லை. இதனால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.

10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பி.ஏ.பி. பாசனத்தில் 5 சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் சிலர் கால்வாயை சேதப்படுத்தி தண்ணீரை திருடுகின்றனர். ஏற்கனவே தண்ணீர் திறப்புக்கு முன் கால்வாயில் சேதமடைந்த பகுதிகளை கான்கீரிட் போட்டு சீரமைத்தோம்.

தற்போது சீரமைப்பு பணிகள் நடந்த பகுதிகளில் தான் சேதப்படுத்தி உள்ளனர். வழக்கமாக தண்ணீர் திருட்டை கண்காணிக்க அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும். இந்த ஆண்டு குழு அமைக்காததால் தண்ணீர் திருட்டை தடுக்க முடியவில்லை. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாயை சேதப்படுத்தி தண்ணீரை திருடிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story