நண்பர்களிடம் தகவலை கூறி விட்டு பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை நாகர்கோவிலில் பரிதாபம்


நண்பர்களிடம் தகவலை கூறி விட்டு பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை நாகர்கோவிலில் பரிதாபம்
x
தினத்தந்தி 24 Dec 2018 4:15 AM IST (Updated: 23 Dec 2018 9:19 PM IST)
t-max-icont-min-icon

நண்பர்களிடம் தகவலை கூறி விட்டு பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில் கோட்டார் கலைநகரை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் சஞ்சய் (வயது 17), வல்லன்குமாரன்விளை அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற சஞ்சய் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகன் சஞ்சயை பல இடங்களில் தேடினர். ஆனாலும் சஞ்சய் எங்கு சென்றான் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் அருகே உள்ள ஒரு முந்திரி மரத்தில் சஞ்சய் தூக்கில் பிணமாக தொங் கினான். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். தன் மகன் பிணமாக தொங்கியதை பார்த்து ராஜனும் மற்றும் அவரது உறவினர்களும் கதறி அழுதனர். அதன் பிறகு பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஆனால் சஞ்சய் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது சரிவர தெரியவில்லை. அவன் சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவன் மனமுடைந்து காணப்பட்டான். மேலும் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த சஞ்சய், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளான். அப்போது அவனை நண்பர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். எனினும் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சஞ்சய் தற்கொலை முடிவை தேடிக் கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நண்பர்களிடம் தகவலை தெரிவித்து விட்டு பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story