விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்


விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 24 Dec 2018 4:00 AM IST (Updated: 23 Dec 2018 11:41 PM IST)
t-max-icont-min-icon

விடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்

பென்னாகரம், 

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள். காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். குளிக்கும் இடத்தில் கூட்டம் அலைமோதியதால் போலீசார் சுற்றுலா பயணிகளை வரிசைப்படுத்தி குளிக்க அனுமதித்தனர்.

பின்னர் சுற்றுலா பயணிகள் பரிசலில் ஆர்ப்பரித்து கொட்டிய ஐந்தருவி பகுதிக்கு சென்று மகிழ்ந்தனர். மேலும் ஜெகன்மோகினி குகை, உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் தொங்கு பாலம், பார்வை கோபுரம், மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டமாக இருந்தது.

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகள், உணவகங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக மீன் வறுவல் விற்பனை படுஜோராக நடைபெற்றது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஐந்தருவி பகுதி வெறும் பாறைகளாக காட்சி அளித்தது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story