பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள்


பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 27 Dec 2018 11:00 PM GMT (Updated: 27 Dec 2018 6:02 PM GMT)

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

ஒரு முறை பயன்படுத்தி அகற்றக்கூடிய பிளாஸ்டிக் வகைகளுக்கு வருகிற 1-ந் தேதி முதல் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவு பொருட்களை பாதுகாக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள், உணவு மேசையின் மீது பரப்பப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தெர்மோகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூச்சுகளுடன் கூடிய பேப்பர் தட்டுகள்.

பிளாஸ்டிக் பூச்சுகளுடன் கூடிய பேப்பர் கப்புகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மோகோல் கப்புகள், அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பூச்சுடன் கூடிய பைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை இலை, பாக்குமரத் தட்டுகள், பேப்பர் ரோல், தாமரை இலை, கண்ணாடி -மெட்டல் டம்ளர்கள், மூங்கில் மற்றும் மரத்தினாலான பொருட்கள்.

பேப்பர் உறிஞ்சு குழாய், துணி, காகிதம், சணல் பைகள், துணி கொடிகள், பீங்கான் வகைகள், மண்பாண்டங்கள் போன்ற பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம். எனவே, பொதுமக்கள் அரசின் உத்தரவுக்கு இணங்க ஒருமுறை பயன்படுத்தி அகற்றக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து அதற்கு மாற்றாக குறிப்பிடப்பட்டு உள்ள பொருட்களை பயன்படுத்தி ஈரோடு மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பேணி காக்க உதவுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story