வலங்கைமானில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் தாய்-மகள் உள்பட 5 பேர் கைது


வலங்கைமானில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் தாய்-மகள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2018 4:15 AM IST (Updated: 28 Dec 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமானில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தாய்-மகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள சித்தமல்லி தோப்புத்தெருவை சேர்ந்தவர் வைரக்கண்ணு. இவருடைய மகன் ராதாகிருஷ்ணன் (வயது 34). இவர் நீடாமங்கலம் கடைத்தெருவில் டூடோரியல் சென்டர் நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று வலங்கைமான் அருகே மூணாறு தலைப்பில் தனது நண்பர் ஷேக்முகமதுடன் மீன் பிடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது கொட்டையூர் முருகன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது பூவனூரை சேர்ந்த ரஜினி, அவருடைய உறவினர் தன்ராஜ் ஆகியோர் வந்து மோட்டார் சைக்கிளை வழிமறித்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை அவதூறாக பேசியதாக கூறி ராதாகிருஷ்ணனிடம் தகராறு செய்தனர். இதையடுத்து ராதாகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்ல முயன்றார்.

அப்போது அங்கு காரில் வந்த ரஜினியின் அண்ணன் ராஜ்குமார், அவருடைய மனைவி ராஜகுமாரி (31), மாமியார் நெய்குன்னத்தை சேர்ந்த ராஜலெட்சுமி (61), உறவினர்கள் வர்கீஸ் (27), இளங்கோவன் (29), விக்னேஷ் (29) ஆகிய 6 பேரும் உருட்டுக்கட்டையால் ராதாகிருஷ்ணனை தாக்கினர். மேலும் அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகுமாரி மற்றும் இவருடைய தாய் ராஜலெட்சுமி, வர்கீஸ், இளங்கோவன், விக்னேஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய ராஜ்குமாரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story