தேசிய அளவில் 4-வது இடம்: நெட்டப்பாக்கம் போலீசாருக்கு முதல்-அமைச்சர் விருது பாராட்டு விழாவில் நாராயணசாமி அறிவிப்பு


தேசிய அளவில் 4-வது இடம்: நெட்டப்பாக்கம் போலீசாருக்கு முதல்-அமைச்சர் விருது பாராட்டு விழாவில் நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2018 12:00 AM GMT (Updated: 27 Dec 2018 10:33 PM GMT)

தேசிய அளவில் சிறந்த போலீஸ் நிலையமாக 4-வது இடம்பிடித்த நெட்டப்பாக்கம் போலீசாருக்கு முதல்-அமைச்சர் விருது வழங்கப்படும் என்று பாராட்டு விழாவில் நாராயணசாமி அறிவித்தார்.

நெட்டப்பாக்கம்,

நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறந்த 10 காவல் நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த 10 காவல் நிலையங்களில் நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையம் 4-வது இடத்தை பிடித்தது. இதையொட்டி போலீசாருக்கு நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரிநந்தா தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி. சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், விஜயவேணி வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்துகொண்டு, மேற்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், முருகன் மற்றும் போலீசாருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
புதுவை மாநிலம் பல்வேறு தடைகளுக்கு இடையே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த மாதம் அகில இந்திய அளவில் சிறந்த பள்ளியாக கூனிச்சம்பட்டு அரசு தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது. அதேபோல் தற்போது காவல்துறைக்கும் விருது கிடைத்துள்ளது.

புதுச்சேரி காவல்துறை இந்திய அளவில் இடம்பெறுவதே பெரிய விஷயம். அதிலும் முதல் 10 இடங்களில் 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதனுக்கு 35 ஆயிரம், இன்ஸ்பெக்டருக்கு 30 ஆயிரம், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு தலா 25 ஆயிரம், உதவி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு தலா 20 ஆயிரம், தலைமை காவலர்களுக்கு தலா 10 ஆயிரம், காவலர்களுக்கு தலா 5 ஆயிரம் என ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்த பரிசு முதல்-அமைச்சர் விருதாக ஜனவரி 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் முன்னிலையில் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், வட்டார காங்கிரஸ் தலைவர் அம்மைநாதன் மற்றும் தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Next Story