தொழில் நிறுவனங்கள் நடத்தும் சிறப்பு நோக்கு முகாம்களில் பங்கேற்று பயனடையுங்கள் கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்
தொழில் நிறுவனங்கள் நடத்தும் சிறப்பு நோக்கு முகாம்களில் பங்கேற்று பயனடையுங்கள் என கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் உலகளாவிய முதலீட்டாளர்களின் மாநாடு சென்னையில் வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. அதிக அளவில் முதலீட்டாளர்கள் பங்கேற்கவும், தொழில் முதலீடுகளை அதிக அளவில் திரட்டவும் அரசு பல்வேறு வளமிக்க நாடுகளிலும், இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பு முகாம்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உலகளாவிய முதலீட்டாளர்களின் கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு சிறப்பானதாக கருதப்படுகிறது. மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் அதிகப்படியான முதலீடுகளை திரட்ட அதிக அளவிலான சாத்திய கூறுகள் உள்ளதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நோக்கு முகாம் நடத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர துறையில் உள்ள வாய்ப்புகளை துடிப்புள்ள தொழில் முனைவோருக்கு எடுத்து செல்லுதல், வருங்கால தொழில் முதலீட்டாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுதல் முகாமின் நோக்கமாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ரூ. ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான முதலீடுகள் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள பல்வேறு துறைகளில் தொழில்கள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தில் சிறப்பு நோக்கு முகாம் வருகிற 31-ந் தேதி பிற்பகல் ஓசூர் கிலாரெஸ்டாவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை தொடங்கி வைக்கிறார். இதில் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அளவிலான அனைத்துறை அலுவலர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கங்கள், நடுத்தர தொழில் நிறுவன முதலீட்டாளர்கள், வங்கி அதிகாரிகள் பலரும் இம்முகாமில் பங்கேற்க உள்ளனர்.
மேலும், தொழில் முதலீட்டாளர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தொழில்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் இச்சிறப்பு நோக்கு முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story