கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களிடம் அமைச்சர் குறைகளை கேட்டார்
மானாமதுரை பகுதியில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று அமைச்சர் பாஸ்கரன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
மானாமதுரை,
மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே அமைச்சர் பாஸ்கரன் கிராமம் கிராமமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் ஏற்கனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருந்த மாரியப்பன்கென்னடி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்பு, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த போது மாரியப்பன்கென்னடி மக்களின் அடிப்படை பிரச்சினையான குடிநீர் பிரச்சினையை முன்னிறுத்தி சாலைக்கிராமம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் சொந்த நிதி மூலம் குடிநீர் வினியோகம் செய்து தந்தார்.
மேலும் மானாமதுரை பெண்கள் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம், கிராமப்புற சாலைகளை சரி செய்தல், தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி தீர்வை ஏற்படுத்தி தந்தார். ஆனால் தற்போது மானா மதுரை தொகுதியில் கடந்த ஒருவருடத்திற்கு மேலாக எந்தவொரு பணிகளும் நடக்காமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் இந்த தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி. ஆகியோர், தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதன்படி குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் தோறும் நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அடிப்படை வசதிகளை செய்துதர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், நலத்திட்ட பணிகள் செய்ய முடியாது என்பதால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே பல கிராமங்களில் அமைச்சர் நேரில் சென்று குறைகளை கேட்டு, அங்கு பணிகளை வேகமாக நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story