தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தினர்


தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தினர்
x
தினத்தந்தி 31 Dec 2018 10:15 PM GMT (Updated: 31 Dec 2018 7:13 PM GMT)

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 மூதாட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

தர்மபுரி,

தர்மபுரியை சேர்ந்தவர் ராணி (வயது 60). இவர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்தார். அங்கு கண் இமைக்கும் நேரத்தில் தனது உடையில் மறைத்து பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணெயை தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இதனால் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். எனது பெயரில் இருந்த சொத்துக்களை விற்கவும் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி கொண்டனர். இதன்காரணமாக நான் கோவிலில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. எனக்குரிய சொத்துக்கள் மீண்டும் கிடைக்கவும், என் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றேன் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக மூதாட்டி மற்றும் அவருடைய மகன் சிவா ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் அரூர் அருகே உள்ள சிட்லிங் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சின்னத்தாய் (85) தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எனது மகளும், மருமகனும் அடித்து துன்புறுத்துகிறார்கள். என்னிடம் உள்ள சொத்துக்களை கேட்டு மிரட்டுகிறார்கள்.

அண்மையில் என்னை ஒரு தோப்பில் கொண்டுபோய் விட்டுவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும். எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார். கலெக்டர் அலுவலகத்தில் 2 மூதாட்டிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story