கஜா புயலுக்கு பிறகு கோடியக்கரை சரணாலயத்திற்கு வந்த வெளிநாட்டு பறவைகள்


கஜா புயலுக்கு பிறகு கோடியக்கரை சரணாலயத்திற்கு வந்த வெளிநாட்டு பறவைகள்
x
தினத்தந்தி 2 Jan 2019 4:15 AM IST (Updated: 2 Jan 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலுக்கு பிறகு கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கம். ஆண்டுதோறும் ஆர்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 4 அடி உயரமுள்ள நாரை உள்பட பல்வேறு பறவைகள் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் கஜா புயலினால் நாகப்பட்டினம், வேதாரண்யம், வாய்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எண்ணற்ற தென்னை மரங்கள் உள்பட பல்வேறு வகையான மரங்கள் சாய்ந்து விழுந்தன. அதேபோல எண்ணற்ற மின்கம்பங்கள், மின்மாற்றிகள், வீடுகளும் சேதமானது. இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து முகாம்களில் தங்கி வாழக்கூடிய நிலைமை ஏற்பட்டது.

அதேபோல இந்த புயல் கோடியக்கரையில் உள்ள சரணாலயத்தையும் உருக்குலைத்து விட்டது. கஜா புயலின்போது காடுகளில் இருந்த சில மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. இலைகள் அனைத்தும் உதிர்ந்து விட்டன.

கஜா புயலின் தாக்குதலால் கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் இருந்த ஏராளமான மான்கள் உயிரிழந்தன. இதேபோல் பறவைகளும் ஆங்காங்கே இறந்தன. இதனால் இரை தேடி பறவைகளும், விலங்குகளும் சாலைகளில் சுற்றித்திரியும் நிலை ஏற்பட்டது. புயலுக்கு பிறகு பறவைகள் இன்றி சரணாலயம் வெறிச்சோடியது.

இந்த நிலையில் கஜா புயலுக்கு பிறகு கடந்த சில நாட்களாக சைபீரியா, ஈரான், ஈராக் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பூ நாரை, கொசு உள்ளான், கூழைக்கிடா, கரண்டி மூக்குநாரை, சிவப்புகால் உள்ளான், ஆஸ்திரேலியாவில் இருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால் நாரை, பர்மாவில் இருந்து சிறவி வகைகள், இலங்கையில் இருந்து கடல் காகம், ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆர்டிக்டேன்(ஆலா), இமாச்சல பிரதேசத்தில் இருந்து உள்ளான் வகை என 25-க்கும் மேற்பட்ட வகையான ஆயிரக்கணக்கான பறவைகள் வரத்தொடங்கி உள்ளன.

வெளிநாட்டில் இருந்து வரத்தொடங்கியுள்ள பறவைகளை வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பார்த்து செல்கின்றனர்.

Next Story