தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்த அமெரிக்க வாலிபரின் விசாவை போலீசார் ரத்து செய்து திருப்பி அனுப்பினர்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்த அமெரிக்க வாலிபரின் விசாவை போலீசார் ரத்து செய்து திருப்பி அனுப்பினர்
x
தினத்தந்தி 1 Jan 2019 11:45 PM GMT (Updated: 2019-01-02T00:27:26+05:30)

தூத்துக்குடி வந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்த அமெரிக்க வாலிபரின் விசா ரத்து செய்யப்பட்டு, அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா ஓக்லாந்தை சேர்ந்த மார்க் சியல்லா (வயது 35) என்பவர் கடந்த 27-ந் தேதி சுற்றுலா விசாவில் தூத்துக் குடிக்கு வந்தார். அவருக்கு வருகிற 21-ந் தேதி வரை விசா உள்ளது. அவர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் சிலரை நேரில் சந்தித்தார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராமங்களுக்கு மார்க் சி யல்லா சென்று மக்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மார்க் சி யல்லாவிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த லேப்டாப், கேமரா ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

மேலும், மார்க் சியல்லா சுற்றுலா விசாவில் வந்து இருப்பதால், சுற்றுலா தலங் களை மட்டுமே பார்வையிட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் விசா விதிமுறைகளை மீறி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக செய்திகள் சேகரித்ததாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் விசா விதிமுறை மீறல் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், விதிமுறை மீறல் உறுதி செய்யப்பட்டதால், மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு மார்க் சியல்லாவின் விசா நேற்று ரத்து செய்யப்பட்டது. உடனடியாக அவரை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். அதன்படி நேற்று மாலை 6-15 மணிக்கு தூத்துக்குடியில் அவர் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டார். அங்கு இருந்து இரவு 9-30 மணிக்கு விமானம் மூலம் ஐதராபாத்துக்கு சென்றார். அங்கிருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்கும், பின்னர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Next Story