சாலையின் நடுவே தடுப்பு சுவர்கள் கூடலூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்


சாலையின் நடுவே தடுப்பு சுவர்கள் கூடலூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
x
தினத்தந்தி 1 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-02T02:52:32+05:30)

கூடலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் நோயாளி அவதியடைந்தார்.

கூடலூர், 

கூடலூர் பழைய பஸ் நிலையம் முதல் ஊட்டி செல்லும் சாலையில் உள்ள ராஜகோபாலபுரம் வரையும், புதிய பஸ் நிலையம் முதல் செவிடிப்பேட்டை வரையும் சாலையின் நடுவில் போக்குவரத்து போலீசார் புதியதாக தடுப்பு அமைத்து உள்ளனர். அந்த சாலை மிகவும் குறுகலாக மாறி விட்டது. மேலும் போதிய இடவசதி இல்லாததால் வாகனங்களும் நிறுத்த முடிவது இல்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். விபத்து காலங்களில் பந்தலூர் பகுதியில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் கூடலூர் பழைய பஸ் நிலையம் முதல் ஊட்டி செல்லும் சாலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் 1 மணி நேரத்துக்கு ஒரு தடவை இயக்கப்படுகிறது.

இந்த சமயத்தில் சாலையின் நடுவே தடுப்பு சுவர் வைக்கப்பட்டு உள்ளதால் ஆம்புலன்ஸ் முன்னால் செல்லும் வாகனங்களை முந்து செல்ல முடியவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள் சைரன் அடித்தவாறு நீண்ட நேர தாமதத்துக்கு பின் ஊர்ந்து செல்கின்றன. கடந்த காலங்களில் தடுப்பு சுவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேகமாக இயக்கப்பட்டன.

ஆனால் புதியதாக வைத்த தடுப்பு சுவர்களால் அவசர காலங்களில் நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. போக்கு வரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள், வாகன டிரைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக உயர்அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

நேற்று பகல் 12.20 மணிக்கு கூடலூர் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளியை ஏற்றி கொண்டு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் கேரளாவுக்கு செல்வதற்காக வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் உள்ள ராஜகோபாலபுரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று இருந்தன. இதில் வாகனங்களுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் சிக்கி கொண்டது.

சாலையின் நடுவில் இடைவெளி இல்லாமல் தடுப்பு வைத்துள்ளதால் ஆம்புலன்ஸ் வாகனத்தால் பிற வாகனங்களை முன்னேறி விரைவாக செல்ல முடிய வில்லை. அப்பகுதியில் நின்றிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விட மற்ற வாகன ஓட்டிகளிடம் வலியுறுத்தினார். ஆனால் சாலையின் நடுவே தடுப்பு வைத்து இருந்ததாலும், முன்னால் மற்றும் பின்னால் ஏராளமான வாகனங்கள் நின்றிருந்ததாலும் ஆம்புலன்சுக்கு வழி விட முடியவில்லை.

அப்போது பழைய பஸ் நிலையத்தில் நின்றிருந்த போலீசார் வாகனங்களை வரிசையாக வேகமாக வருமாறு அறிவுறுத்தினார். இதனால் வாகனங்கள் நகர தொடங்கின. அதுவரை வாகனங்களுக்கு மத்தியில் மாட்டி கொண்ட ஆம்புலன்ஸ் மெதுவாக நகர்ந்து அக்ரஹார தெரு பகுதியில் உள்ள இடைவெளி வழியாக வெளியேறி சாலையின் மறுபுறம் வேகமாக சென்றது.

இது போன்ற சம்பவங்கள் தினமும் பலமுறை நடைபெற்று வருகிறது. போக்குவரத்து வாகனங்களை ஒழுங்குபடுத்த தடுப்பு சுவர்களை வைத்துள்ளதாக போலீசார் கூறினாலும், நாள்தோறும் புதிய பிரச்சினைகள் உருவாகி வருகிறது. வரும் காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்படும் நோயாளிகளை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவில்லை எனில் பாதிப்பு ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது.

இது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் கூறியதாவது:-

போக்குவரத்து தானியங்கி சிக்னல் பகுதியில் வாகனங்களை ஒழுங்கு படுத்த அனைத்து ஊர்களிலும் சாலையின் நடுவில் டிவைடர்கள் வைத்துள்ளனர். போக்குவரத்து நெருக்கடி எந்த ஊர்களில் இல்லாமல் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் எந்த பகுதியிலும் தடுப்பு சுவர்கள் வைக்கப்பட வில்லை. ஆனால் கூடலூரில் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி கூடலூர் நகர் முழுவதும் வரிசையாக தடுப்பு சுவர்களை போக்குவரத்து போலீசார் வைத்துள்ளனர்.

இதில் வணிக நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன. கடைகளுக்கு வந்து செல்பவர்கள் வாகனங்களை நிறுத்த வழியின்றி தவிக்கிறார்கள். இதுமட்டுமின்றி ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல வழி கிடையாது. இதை அதிகாரிகள் கவனத்தில் கொள்வது இல்லை. இடைவெளி இல்லாமல் வைத்த தடுப்பு சுவர்களால் பெண்கள், குழந்தைகள், மாணவ- மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்ற பின்னரே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் காலமாக மாறி விட்டது. தேவை இல்லாத இடங்களில் வைத்துள்ள தடுப்பு சுவர்களை அதிகாரிகள் இனி வரும் நாட்களில் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்காரிக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை தலைவர் டி.பாலகிருஷ்ணன் அனுப்பி உள்ள மனுவில் கூறி உள்ளதாவது:-

கூடலூர் நகரில் சாலையின் நடுவில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக புதியதாக தடுப்பு சுவர் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய நேரத்தில் இயக்க முடிவது இல்லை. கூடலூர் பழைய பஸ் நிலையம் முதல் ராஜகோபாலபுரம் வரை 9 வங்கிகளும், ஏ.டி.எம். மையங்களும் உள்ளது. மேலும் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், கோவில் தனியார் ஆஸ்பத்திரிகளும், 2 பஸ் நிறுத்தங்களும் உள்ளன.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் நடுவில் புதியதாக தடுப்பு சுவர்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிய வில்லை. இதன் காரணமாக நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே கூடலூரில் புதியதாக வைத்த தடுப்பு சுவர்களை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story