பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு வாகனம் - மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்


பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு வாகனம் - மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Jan 2019 4:00 AM IST (Updated: 2 Jan 2019 5:14 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொதுமக்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதற்கான வாகனத்தை மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு நேற்று முதல் தடை விதித்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் துண்டுபிரசுரங்கள் மற்றும் கலைக்குழுவினரி கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், தடை செய்யப்பட்டுள்ள பொருட்களுக்கு மாற்றுப்பொருட்களை அறிமுகம் செய்யும் பொருட்டு மாநகராட்சி சார்பாக இயற்கை திருவிழா என்ற கண்காட்சியும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை சார்பில், தடை நடைமுறை குறித்த கருத்தரங்கு, கண்காட்சிகளும் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பிளாஸ்டிக் தடை குறித்து தெற்கு இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சாரா இசைப்பள்ளி மாணவ- மாணவிகள் மூலம் ஸ்கேட்டிங், சிலம்பம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கடை வீதிகளில் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வசம் இருப்பில் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைக்கும் விதமாக சேகரிப்பு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கலந்து கொண்டு, பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கும் வாகனத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் இந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தாமாக முன்வந்து போடலாம். மேலும் மக்கள் கைவசம் வைத்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை தாமாக முன்வந்து ஒப்படைக்க சேகரிப்பு பெட்டகம் மாநகராட்சி அலுவலகம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் நிறுவப்பட்டு உள்ளது. இங்கு பிளாஸ்டிக் பொருட்களை போடுவோருக்கு மாற்றாக துணிப்பைகள் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் தடையை முழுமையாக பின்பற்றி இயற்கை வளம் காக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார். 

Next Story