விஜய் வித்யாலயா கல்வி குழுமம் சார்பில் கிருஷ்ணகிரியில் மாரத்தான் போட்டி நாளை நடக்கிறது
விஜய் வித்யாலயா கல்வி குழுமம் சார்பில் கிருஷ்ணகிரியில் மாரத்தான் போட்டி நாளை (சனிக் கிழமை) நடக்கிறது.
கிருஷ்ணகிரி,
பொதுமக்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கிருஷ்ணகிரியில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழுமத்தின் சார்பில் 3 கிலோ மீட்டர் தூரம் வரையில் ஓடும் வகையில் “விஜய்ஸ் பன் ரன்” என்னும் மாரத்தான் போட்டி நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு விஜய் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்கள். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழுமத்தின் தலைவர் டி.சி.இளங்கோவன், தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் இ.பிரேம், இ.சினேகா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இந்த ஓட்ட போட்டி கிருஷ்ணகிரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளியில் தொடங்கி, விளையாட்டு மைதானம், அரசு கலைக்கல்லூரி சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழுமத்தின் தலைவர் டி.சி.இளங்கோவன் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தின் அவசியத்திற்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். இந்த நிகழ்ச்சி நடைபெறும் பகுதி முழுவதும் நியான் விளக்கு ஒளியால் வண்ணமயமாக்கப்பட உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் அவசியம் மற்றும் உடலை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளும் வகையில் சில எளிய அன்றாட உடற்பயிற்சி குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கிருஷ்ணகிரியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆசிய புத்தக பதிவேட்டில் இடம் பெற்ற டிரம்மர் குமரன், தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் கவுதம், ஜூம்பா கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு அனைத்தும் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழும வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலர்கள் செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாரத்தான் போட்டிக்கான லோகோவை ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழும தலைவர் டி.சி.இளங்கோவன், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கைப்பந்து பயிற்சியாளர் அற்புத ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story