முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் டெல்லி பயணம்


முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் டெல்லி பயணம்
x
தினத்தந்தி 3 Jan 2019 11:00 PM GMT (Updated: 3 Jan 2019 9:35 PM GMT)

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி நாளை போராட்டம் நடத்துவதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

புதுச்சேரி,

புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. அரசின் திட்டங்களுக்கு தடைபோடுவதாகவும், அன்றாட நிகழ்வுகளில் தலையிட்டு வருவதாகவும் கவர்னர் கிரண்பெடி மீது முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வருகிறார்.

மேலும் மாநில அரசின் பரிந்துரையின்றி பாரதீய ஜனதா கட்சியினர் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்ததும் புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி இதுதொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார்.

இந்த கூட்டத்தை பிரதான எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. புறக்கணித்த நிலையில் 21 கட்சிகள் கலந்துகொண்டு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரியும், கவர்னர் கிரண்பெடி புதுவையை விட்டு வெளியேற கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் போராட்டம் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் நேற்று முன்தினம் புதுவையில் இருந்து ரெயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்தநிலையில் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றனர்.

Next Story