ஆரணியில் பஸ் ஏற முயன்ற பெண்ணிடம் 1½ பவுன் நகையை கைப்பையுடன் பறித்து ஓடிய சிறுமி பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
ஆரணியில் பஸ் ஏற முயன்ற பெண்ணிடம் 1½ பவுன் நகையை கைப்பையுடன் பறித்துக்கொண்டு ஓடிய சிறுமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆரணி,
பரபரப்பான இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-
சேத்துப்பட்டு அருகே உள்ள முருகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகா (வயது 62). ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர். நேற்று முன்தினம் சொந்த வேலையாக பஸ்சில் ஆரணிக்கு வந்தார். வேலை முடிந்தபின் மாலையில் ஊருக்கு செல்வதற்காக ஆரணி புதிய பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார். பஸ் நிலையம் அருகே வந்தபோது சேத்துப்பட்டுக்கு செல்லும் பஸ் வந்தது. உடனே பஸ்சை நிறுத்தி மல்லிகா அதில் ஏற முயற்சி செய்தார்.
அப்போது அவர் வைத்திருந்த கைப்பையை பறித்துக்கொண்டு ஒரு சிறுமி தப்பி ஓடினாள். அதில் 1½ பவுன் நகை இருந்தது. உடனே மல்லிகா திருடி திருடி என சத்தம்போட்டுக்கொண்டே அந்த சிறுமி ஓடிய திசையை நோக்கி சென்றார். அதற்குள் பொதுமக்கள் அந்த சிறுமியை மடக்கிப்பிடித்து நகையை மீட்டனர்.
பின்னர் சிறுமியை ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் அவள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சிறுமியை கைது செய்த போலீசார் அவளை திருவண்ணாமலையில் உள்ள சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அந்த சிறுமியை கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் சிறுமியை போலீசார் கடலூருக்கு கொண்டு சென்று சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
Related Tags :
Next Story