சேலத்தில் அனுமதியின்றி இயங்கிய 8 சாயப்பட்டறைகள் இடிப்பு


சேலத்தில் அனுமதியின்றி இயங்கிய 8 சாயப்பட்டறைகள் இடிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2019 4:30 AM IST (Updated: 5 Jan 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் அனுமதியின்றி இயங்கிய 8 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன.

சேலம், 

சேலம் மாநகரில் அன்னதானப்பட்டி, குகை, கருங்கல்பட்டி, எருமாபாளையம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. மாநகர் மற்றும் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் இயங்கும் சாயப்பட்டறைகளை சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இடித்து அகற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், அன்னதானப்பட்டி பகுதியில் சில சாயப்பட்டறைகள் அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் நேற்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் விஸ்வநாதன், உதவி பொறியாளர் ரெங்கராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று அன்னதானப்பட்டி லைன்மேடு, களரம்பட்டி, சிலோன் காலனி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சில சாயப்பட்டறைகள் வாரியத்தின் அனுமதி பெறாமலும், சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் கழிவுநீர் சாக்கடை கால்வாய் வழியாக திருமணிமுத்தாற்றில் கலந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வெங்கட்ராமன், லோகநாதன், ரமேஷ் உள்பட 8 பேரின் சாயப்பட்டறைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘அனுமதி பெறாமலும், சுத்திகரிப்பு நிலையம் இல்லாமலும் செயல்படும் சாயப்பட்டறைகளை இடித்து அகற்றி வருகிறோம். ஒருமுறை இடித்து அகற்றினாலும் சிலர் மீண்டும் சாயப்பட்டறைகளை இயக்கி வருகின்றனர். அதையும் கண்டுபிடித்து இடித்து வருகிறோம். மேலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றனர்.

Next Story