பெரம்பலூரில் மாணவர் ஏற்படுத்திய விபத்தில் விவசாயி பலி மோட்டார் சைக்கிள் கொடுத்த நண்பரின் தந்தை கைது


பெரம்பலூரில் மாணவர் ஏற்படுத்திய விபத்தில் விவசாயி பலி மோட்டார் சைக்கிள் கொடுத்த நண்பரின் தந்தை கைது
x
தினத்தந்தி 6 Jan 2019 3:45 AM IST (Updated: 6 Jan 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் மாணவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மாணவரையும், அவருக்கு ஓட்டுவதற்கு மோட்டார் சைக்கிள் கொடுத்த, நண்பரின் தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 37). விவசாயி. இவர் கடந்த 31-ந் தேதி இரவு பெரம்பலூர்- துறையூர் மாநில நெடுஞ்சாலையில் செஞ்சேரி அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சஞ்சீவி மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சஞ்சீவியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் பெரம்பலூர் பாளையம் கிராமத்தை சேர்ந்த ஐ.டி.ஐ. படிக்கும் 17 வயதுடைய மாணவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவரை போலீசார் பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவர் சம்பவத்தன்று தனது நண்பர்களான மாணவர்கள் 2 பேருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதும், அப்போது அந்த வழியாக முன்னால் நடந்து சென்ற சஞ்சீவி மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றதும் தெரியவந்தது. அந்த மாணவர் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் அவருடன் வந்த நண்பரது தந்தை நல்லுச்சாமிக்கு(41) சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

பெரம்பலூர் நகர் பகுதியில் நடக்கும் பல்வேறு சாலை விபத்துகள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டும் வாகனங்களால் தான் நிகழ்கிறது. சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதனை தடுக்கும் பொருட்டும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஓட்டுவதற்கு இரு சக்கர வாகனங்களை அவர்களின் பெற்றோர் அல்லது வேறு யாரும் கொடுக்க கூடாது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, விபத்து ஏற்படுத்திய 17 வயது மாணவரையும், அவருக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்த நல்லுசாமியையும் கைது செய்ய பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி (பொறுப்பு) மற்றும் போலீசார் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும், இரு சக்கர வாகனத்தில் 3 பேரை பயணம் செய்ததாகவும் மற்றும் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்தியததாகவும் வழக்குகள் பதிவு செய்து 17 வயது மாணவரையும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களிடம் ஓட்டுவதற்கு மோட்டார் சைக்கிள் கொடுத்த நல்லுச்சாமியையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும் அந்த மாணவரின் தந்தையையும் போலீசார் எச்சரித்தனர். ஏற்கனவே பெரம்பலூர் நகர் பகுதியில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால், அவர்களை போலீசார் பிடித்து, அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்து எச்சரிப்பது மட்டுமல்லாமல், பெற்றோருக்கும் அபராதம் விதிக்கும் முறை அமலில் உள்ளது. விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்ததாக அவரது நண்பரின் தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்திலேயே இதுதான் முதல் முறை என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story