“தமிழ் மொழியில் சமஸ்கிருதமும் இணைந்துள்ளது” மாநில மாநாட்டில் அமைப்பு செயலாளர் பேச்சு


“தமிழ் மொழியில் சமஸ்கிருதமும் இணைந்துள்ளது” மாநில மாநாட்டில் அமைப்பு செயலாளர் பேச்சு
x
தினத்தந்தி 6 Jan 2019 4:30 AM IST (Updated: 6 Jan 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

“தமிழ் மொழியில் சமஸ்கிருதமும் இணைந்துள்ளது” என மாநில மாநாட்டில் அமைப்பு செயலாளர் ஸ்ரீராம் தெரிவித்தார்.

திருச்சி,

சமஸ்கிருத பாரதி அமைப்பின் தென் தமிழ்நாடு கிளை சார்பில் மாநில மாநாடு திருச்சி பிராட்டியூரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று குத்துவிளக்கேற்றத்துடன் தொடங்கியது.

மாநாட்டிற்கு தமிழ்நாடு-கேரள அமைப்பின் செயலாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கி பேசுகையில், “பாரதம் என்ற பெயரிலேயே சமஸ்கிருதம் உள்ளது. நாட்டில் பழங்கால ஆவணங்கள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியிலேயே உள்ளன. இதனால் சமஸ்கிருதம் கற்பதன் மூலம் ஆவணங்களில் உள்ளவற்றை அறிய முடியும். தமிழ் மொழியில் சமஸ்கிருதமும் இணைந்துள்ளது. தமிழில் அன்றாட பேச்சு வழக்குகளில் சமஸ்கிருதம் இணைந்துள்ளதை அனைவரும் அறியலாம். சமஸ்கிருதம் கற்பது எளிது தான். 10 நாள் பயிற்சியில் சமஸ்கிருத மொழியை கற்க முடியும்” என்றார்.

மாநாட்டில் ஆன்மிக சொற்பொழிவாளர் விசாகா ஹரி பேசுகையில், “தற்போது நாட்டின் தேச பக்தி அனைவருக்கும் முக்கியம். தேச பக்தி இருந்தால் தான் நாடு முன்னேறும். சாஸ்திரங்கள், பூஜைக்கு மட்டும் சமஸ்கிருதம் மொழி பயன்படுத்துவதல்ல. மொழி, இனம், சாதி பாகுபாடின்றி அனைவரும் சமஸ்கிருதம் கற்கலாம்” என்றார்.

மாநாட்டில் தென் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் அனந்த கல்யாண கிருஷ்ணன், புத்தக பதிப்பின் பொறுப்பாளர் சத்யநாராயணன் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட சமஸ்கிருத பாரதி அமைப்பை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சமஸ்கிருத மொழி கல்வி நிறுவனங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கண்காட்சி அமைத்துள்ளனர். இதில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், அறிவியல், இலக்கியம் தொடர்பாக சமஸ்கிருத மொழியில் விளக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். தொடர்ந்து மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய மந்திரி அனந்தகுமாரும், ஆதீனங்களும் பங்கேற்க உள்ளனர். அதனைத்தொடர்ந்து மாநாடு நிறைவு பெறுகிறது.

Next Story