உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 6 Jan 2019 5:45 AM GMT (Updated: 6 Jan 2019 5:45 AM GMT)

அவர் கலைத்துறையில் கோலோச்சிய பிரபலம். நடுத்தர வயதைக் கடந்தபோது அவரது மார்க்கெட் கிடுகிடுவென சரிந்தது. அதை தொடர்ந்து, துறை சார்ந்த நண்பர்கள் ஒவ்வொருவராக அவரிடமிருந்து விலகினார்கள். அதனால் தனிமை அவரை வாட்டியது.

அவர் ‘பிசி’யாக இருந்த காலகட்டத்தில் குடும்பத்தினர் பற்றிய நினைப்பே இல்லாத வராக ஓடிக்கொண்டிருந்தார். பணம் மட்டுமே அவரிடமிருந்து அவர்களுக்கு கிடைத்தது. பாசத்தை யாருக்கும் அவர் கொடுக்கவில்லை. அதனால் மார்க்கெட் இழந்திருந்த அவரை குடும்பத்தினரும் திரும்பிப்பார்க்கவில்லை.

அவர் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்திலும் மாலை நேரம் வந்துவிட்டாலே மது பாட்டிலை திறந்துவிடுவார். அப்போது அவரோடு உட்கார்ந்து குடிப்பதற்கு பிரபலங்கள் பலர் போட்டி போடுவார்கள். அவரும் குடித்துவிட்டு நள்ளிரவை தாண்டும் வரை தனது இளமைக்கால சாகசங்களை கூறிக்கொண்டிருப்பார். இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. அவர் போன் போட்டு அழைத்தாலும் யாரும் மது விருந்துக்கு வருவதில்லை. இதனால் விரக்தியடைந்தார்.

அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தோழிகளோடு ஊர்சுற்றுவதை மட்டும் ஒழுங்காக செய்துகொண்டிருந்தாள். மண வயதை தாண்டிக்கொண்டிருந்த அவளுக்கு, திருமணத்தில் ஏனோ ஆர்வம் இல்லை. தந்தையும்- மகளும்கூட பார்ப்பதோ, பேசுவதோ கிடையாது.

அந்த பகுதியில் இளைஞன் ஒருவன் வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தான். அவன் அந்த பெண் மீது கண்வைத்தான். ஆனால் அவள், ‘உனக்கும், எனக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது’ என்பதுபோல், பார்வையாலே அவனை அலட்சியப்படுத்தினாள்.

அடுத்து அவன், அவளது தந்தையை குறிவைத்தான். தினமும் மாலை நேரத்தில் அந்த கலை பிரபலம், மது அருந்துவதற்காக காரில் ஏறும்போதெல்லாம் வலிய வந்து அவர் முன்னால் நின்று கும்பிடுபோட்டுவிட்டு சென்றான். அவரும் பதில் வணக்கம் செலுத்தினார். அவரிடம் தன்னை கலை ஆர்வமிக்கவனாக காட்டிக்கொண்டான்.

அன்று அவன் வழக்கம்போல் வணக்கம் செலுத்தியபோது, ‘என் மீது ரொம்ப மதிப்பு வைத்திருக்கிறாயே. வா.. தம்பி. காரில் ஏறு.. நாம் பேசிக்கொண்டே போகலாம்’ என்று அழைத்தார். அவனும் பவ்யமாக முன்இருக்கையில் ஏறிக்கொண்டான். அவரது பழைய சாதனைகளை சுட்டிக்காட்டி புகழ்ந்துதள்ளினான். அவரும் ரொம்ப நாளைக்குப் பிறகு புகழ்ச்சி கொடுத்த மகிழ்ச்சியில் மெய் மறந்தார்.

வழக்கமான ஓட்டலுக்கு சென்று மது அருந்தினார். அவனையும் குடிக்கச் சொன்னார். முதலில் பவ்யமாக மறுத்த அவன், பின்பு அவரோடு அமர்ந்து பருகினான். தொடர்ந்து, அவர் தினமும் அவனை அழைத்தார். அவனும் சென்றான். அவர்களுக்குள் நட்பு இறுகியது. சில மாதங்களிலே அவன் சொல்வதை எல்லாம் கேட்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். குடும்பத்தினர் கண்டுகொள்ளாமலே இருந்ததால், அவரை அவன் கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டான்.

அதன் பின்பு அவரிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. வெளியே போய் மது அருந்துவது மரியாதைக்குறைவானது என்று கூறி, வீட்டிலே சிறிய ‘பார்’ ஒன்றை உருவாக்கிகொடுத்தான். அடுத்து, ‘தினமும் மது அருந்துவது உடல் நலத்தை பாதிக்கும்’ என்றுகூறி அவருக்கு வேறு போதை வஸ்துக்களை அறி முகம் செய்தான். அவர் அதில் அமிழ்ந்து போனார். அடுத்து, அவன் எப்போதும் தன்னோடு இருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். அவனும் அதை ஏற்றுக்கொண்டு அவருடனே தங்கினான்.

நாட்கள் நகர்ந்தன. அவன் என்ன செய்தானோ தெரியாது. முதலில் அவனை திரும்பிக்கூட பார்க்கவிரும்பாத அந்த பெண்ணும் அவனது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டாள். ‘அவர் ரொம்ப நல்லவர். அப்பாவை நன்றாக பார்த்துக்கொள்கிறார். என்னையும் அவர் நிச்சயம் கண்கலங்காமல் கவனித்துக்கொள்வார். அதனால் அவரை எனக்கு திருமணம் செய்துவையுங்கள்’ என்று நிர்பந்தம் செய்துகொண்டிருக்கிறாள். எந்நேரமும் அவனையே சுற்றிசுற்றி வருகிறாள். இரவிலும் இருவரும் வெகுநேரம் ஒன்றாக இருக்கிறார்கள். குடும்பத்தினர் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

அவளை அவனிடம் இருந்து மீட்பதைவிட, ‘விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் அல்லவா?’ என்ற கோணத்தில் மட்டுமே அவர்கள் சிந்தித்துக்கொண்டிருப்பதால், தந்தை, மகள் இருவரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்ட மகிழ்ச்சியில் அவன் அடுத்தவர் வீட்டிற்குள் அமர்ந்துகொண்டு ‘அல்வா’ கொடுத்துக்கொண்டிருக்கிறான்.

- உஷாரு வரும்.

Next Story