பொங்கல் பண்டிகையையொட்டி மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்


பொங்கல் பண்டிகையையொட்டி மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 7 Jan 2019 3:45 AM IST (Updated: 7 Jan 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி மண் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர்,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பொங்கல் அன்று வீடுகளில் மண்பானையில் பச்சரிசியால் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படையலிட்டு வழிபடுவது தமிழர்களின் வழக்கமாகும். நகரம், கிராமம் என்ற பாகுபாடு இன்றி அனைத்து குடும்பங்களிலும் மண்பானையில் பொங்கலிடுவது தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாக உள்ளது. மேலும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டில் இருந்து பொங்கலுக்கு கொடுக்கும் சீர்வரிசை பொருட்களில் பானையும் ஒன்று.

இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பாளையம், செட்டிகுளம், சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான பானை மற்றும் பெரிய அளவிலான பானைகளை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். முழுமை பெற்ற பொங்கல் பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து உள்ளனர்.

இதேபோல் பொங்கல் பானை வைத்து பொங்கலிடுவதற்கு மண் அடுப்புகள் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து விற்பனைக்காக பொங்கல் பானைகளை வாங்கி செல்கிறார்கள். பானை தயாரிக்க தேவையான களிமண், தயாரித்த மண் பாண்டங்களை சுடுவதற்கு தேவையான தேங்காய் மட்டை உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றத்தால், கடந்த ஆண்டு ரூ.30-க்கு விற்கப்பட்ட சிறிய மண் பானை, இந்த ஆண்டு ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது.

பொங்கல் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையத்தை சேர்ந்த முருகேசன்(வயது 56) கூறுகையில், பாளையம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் தற்போது போதிய வருமானம் கிடைப்பதில்லை. இதனால் அடுத்து வரும் தலைமுறையினர் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர். கிடைக்கின்ற மற்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.

இதனால் தற்போது பாளையம் பகுதியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தொழிலாளர்கள் மண்பாண்டம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதும் பழைய முறைப்படியே சக்கரத்தை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 50 பானைகள் செய்கிறோம். ஏரியில் இருந்து களிமண் கொண்டு வர, ஒரு லோடுக்கு ரூ.5 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. பானை செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான வியாபாரிகள் எங்களை நம்பி ஆர்டர் கொடுக்கின்றனர். இதற்காக பானைகள் தயாரிக்க அதிகமாக உழைக்கிறோம். ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. எங்கள் பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை மற்றும் மின்மோட்டார் இணைக்கப்பட்ட சக்கரம் கொடுக்கவில்லை. எனவே அதனை வழங்குவதற்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி கூறுகையில், தற்போது நாகரிக மோகம் அதிகரித்து வருவதால் மண்பானைகளில் பொங்கலிடுவதை மக்கள் மறந்து வருகிறார்கள். ஏற்கனவே கோவில் சன்னதிகளில் விளக்கு ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் மண்ணால் தயாரிக்கப்படும் அகல் விளக்குகளின் விற்பனை அடியோடு முடிந்து போய்விட்டது. மண் பானை, மண்சட்டி சமையலுக்கு மக்கள் மாறினால் எங்கள் வாழ்வாதாரம் மேம்படும். எனவே இந்த தொழிலை நசுங்காமல் பாதுகாக்க தொழிலாளர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். இதில் அதிக அளவு வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன் என்றார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மண்பாண்டங்கள் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை முழுமையாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் செயல்படுத்தினால் மண் பாண்டங்கள் தேவை அதிகரித்து எங்களது தொழில் உயிர்பெறும். மேலும் பிளாஸ்டிக் பையில் வைத்து தனியார் தோட்டங்கள் மற்றும் அரசு பண்ணைகளில் நாற்றுகள் வளர்த்து, அப்படியே நடவு செய்வதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதைத்தடுக்க சிறிய அளவிலான தொட்டிகள் மூலம் நாற்றுகள் வளர்த்து, நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான தேவை அதிகரிக்கும் பட்சத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெருகும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் முக்கிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 

Next Story