பாளையங்கோட்டையில் மீன்சந்தை அமைக்க வேண்டும் கலெக்டரிடம், வியாபாரிகள் கோரிக்கை


பாளையங்கோட்டையில் மீன்சந்தை அமைக்க வேண்டும் கலெக்டரிடம், வியாபாரிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Jan 2019 11:15 PM GMT (Updated: 2019-01-08T01:54:05+05:30)

பாளையங்கோட்டையில் மீன்சந்தை அமைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் மணீஷ் நாராணவரே முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து 7 பேருக்கு ரூ.7.50 லட்சம் மதிப்பிலான நிதியுதவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

நெல்லை மாவட்ட ம.தி.மு.க. மீனவரணி செயலாளர் அகஸ்டின் பெர்னாண்டஸ் தலைமையில் பாளையங்கோட்டையை சேர்ந்த மீன் வியாபாரிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பாளையங்கோட்டை பகுதியில் மீன்சந்தை இல்லாததால் சிறு வியாபாரிகள் அங்குள்ள தெரு ஓரங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம். இந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மீன் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பாளையங்கோட்டை பகுதியில் மீன் சந்தை அமைத்து தர வேண்டும். அதுவரை தெரு ஓரங்களில் மீன் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அந்த இயக்கத்தினர் கொடுத்த மனுவில், “நெல்லையை அடுத்த ராமையன்பட்டி பகுதியில் துப்புரவு பணியாளர்கள் சரியாக வேலை செய்யாததால் இப்பகுதி மாசு அடைந்து வருகிறது. எனவே தினமும் சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், அங்கு சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து செல்ல வேண்டும். ராமையன்பட்டி பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

அம்பை பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று திராவிடர் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு வழங்கினர்.

சுரண்டை நகரப்பஞ்சாயத்துக்குட்பட்ட சுமார் 30 துப்புரவு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், சீருடைகள் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை உதவிகளை வழங்க வேண்டும். மாதந்தோறும் 5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லை மேற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கழக தலைவர் லூர்து தலைமையில் அந்த கட்சியினர் கொடுத்த மனுவில், “பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் இருந்து ஆவுடையானூர் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

பணகுடி ம.தி.மு.க. செயலாளர் சங்கர் கொடுத்த மனுவில், பணகுடி ராமலிங்கசுவாமி கோவில் திருவிழாவிக்கு கச்சேரி, பட்டிமன்றம் நடத்த முறையான அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி முருகானந்தம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், “மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்க வேண்டும். அவர்களுக்கு மிதிவண்டிகள் மற்றும் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத்தொகையை முறையாக அனைவருக்கும் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், காணும் பொங்கலை முன்னிட்டு காரையார் பகுதிக்கு சுற்றுலா செல்ல வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

Next Story