தமிழகத்தில் கல்விக்காக தனி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட உள்ளது அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


தமிழகத்தில் கல்விக்காக தனி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட உள்ளது அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2019 11:45 PM GMT (Updated: 7 Jan 2019 9:28 PM GMT)

தமிழகத்தில் கல்விக்கான தனி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே உள்ள குமாரகிரி கிராமத்தில் சி.கே.டி. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் 20-வது ஆண்டு விழா மாலையில் நடந்தது. இதில் சென்னை கம்மவார் அறக்கட்டளை தலைவர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். பள்ளி முதல்வர் நம்மாழ்வார் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி ஆண்டு மலரை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட, அதனை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அருப்புகோட்டை ராமலிங்கா குரூப்ஸ் நிறுவனங்களின் தலைவர் தினகரன் ஆகியோர் பெற்று கொண்டனர். தொடர்ந்து, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது;-
இந்த அறக்கட்டளை சார்பில் அடுத்த ஆண்டு கல்லூரி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும். தனியார் பள்ளிகளை போல் தமிழக அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் வருகிற 21-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் 11 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க உள்ளோம். அதே போல் 8, 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மினி லேப்டாப் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

கல்விக்காக தனி தொலைக் காட்சி சேனல் தொடங்கப்பட உள்ளது. அதன் அலுவலகம் சென்னை அண்ணா நூலகத்தில் அமைக்கப்படுகிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 200 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. அந்த ஆசிரியர்கள் பயிற்சி வீடியோக்களை ஒரே நேரத்தில் ஆயிரம் பள்ளி மாணவர்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்ய உள்ளோம். கல்வி சம்பந்தமாக இந்த அறக்கட்டளை எந்த முயற்சி எடுத்தாலும் அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகேசன், மாவட்ட கல்வி அதிகாரிகள் கோவில்பட்டி சீனிவாசன், தூத்துக்குடி வசந்தா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், ஆவின் தலைவர் சின்னத்துரை, சென்னை கம்மவார் அறக்கட்டளை பாலுசாமி, பாலகிருஷ்ணன், அறக் கட்டளை துணை தலைவர் ராஜாராம், முன்னாள் எம். எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story