கடலில் மீன் பிடிக்கும்போது மீனவர்கள் மோதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை


கடலில் மீன் பிடிக்கும்போது மீனவர்கள் மோதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2019 12:20 AM GMT (Updated: 8 Jan 2019 12:27 AM GMT)

வம்பாக்கீரப்பாளையம் மற்றும் வீராம்பட்டினம் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் கடலில் மீன் பிடிக்கும்போது தொடர்ந்து மோதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

அரியாங்குப்பம், 

வீராம்பட்டினம் மற்றும் வம்பாக்கீரப்பாளையம் ஆகிய 2 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கிடையே கடலில் மீன் பிடிக்கும்போது அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த மாதமும் இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன்பிடித்தபோது மீண்டும் மோதிக்கொண்டனர்.

இந்த மோதல் காரணமாக 2 மீனவ கிராமங்களிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த மோதல் குறித்து வீராம்பட்டினம் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரி தெற்கு போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீமிடம் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து மீண்டும் இரு தரப்பினரும் மோதாமல் இருக்க அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பேசும்போது, உங்களின் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், மோதலில் ஈடுபடக்கூடாது என்றும் கூறினார். ஒருதரப்பினர் மீன்பிடித்துக் கொண்டு இருப்பதை தெரிந்து கொண்டு மற்றொரு தரப்பினர் அங்கு வலை விரிக்கக்கூடாது. கடலுக்குள் ஏற்படும் பிரச்சினையை கிராம மக்களிடையேயான மோதலாக மாற்றாமல் தீர்வு காண வேண்டும். அதையும் மீறி மோதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Next Story