டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்டது ஏன்? சபாநாயகர் வைத்திலிங்கம் விளக்கம்


டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்டது ஏன்? சபாநாயகர் வைத்திலிங்கம் விளக்கம்
x
தினத்தந்தி 8 Jan 2019 12:25 AM GMT (Updated: 8 Jan 2019 12:25 AM GMT)

டெல்லியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டது ஏன்? என்று சபாநாயகர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்தார்.

புதுச்சேரி, 

புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் டெல்லியில் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதை பாரதீய ஜனதா கட்சி விமர்சித்திருந்தது. சபாநாயகர் காங்கிரஸ் கட்சிக்காரர் போன்று செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது. இதுதொடர்பாக தனியார் டி.வி.க்கு பேட்டியளித்த கவர்னர் கிரண்பெடியும், சபாநாயகரின் நடவடிக்கையை சட்டம் பார்த்துக்கொள்ளும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்து சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தினை சேர்ந்த அனைத்து கட்சிகளும், புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு டெல்லியில் போராட்டம் நடத்தியபோது நான் அங்கு சென்று எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். நீண்ட தூரம் சென்று போராட்டம் நடத்திய அவர்கள் நல்ல உடல்நலத்துடன் வந்துசேர வேண்டும் என்று வாழ்த்தினேன்.

மக்களின் உணர்வுகளை முழுமையாக செயல்படுத்த மக்களாட்சி தத்துவம் அடிப்படையாக உள்ளது. அதற்காக புதுவை சட்டமன்றம் செயல்படுகிறது. அந்த சட்டமன்றம் மூலம் புதுவை மக்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிமையை பெற்றுத்தருவது சட்டமன்றத்தின் கடமை.

புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு பலமுறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போதும் கட்சி வேறுபாடின்றி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். புதுவை கவர்னரும் இதுதொடர்பான போராட்டத்துக்கு டெல்லி சென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர், போராட்டத்துக்கு செல்பவர்கள் பாதுகாப்புடன் வரவேண்டும் என்று கூறியிருந்தார்.

எனது மூத்த சகோதரியான அவரது கருத்தினை நான் ஏற்கிறேன். ஏனென்றால் அரசியல் கட்சிகளின் போராட்டம் வெல்லவேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் உள்ளது. புதுவை விடுதலை போராட்டத்தில் கலந்துகொண்டு விடுதலை பெற்றுத்தந்த குடும்பத்தை சேர்ந்தவன் நான். எனவே, புதுவை மக்கள் தங்களை தாங்களே ஆள அதிகாரம் பெற வேண்டும் என்ற தாக்கம் எனக்கு உண்டு. அந்த தாக்கத்தின் காரணமாகத்தான் போராட்ட களத்துக்கு சென்று வாழ்த்து தெரிவித்தேன்.

இதேபோல் கவர்னரும் அந்த போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நான் மூத்த சகோதரி கூறியதை கவனத்தில் எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் செய்தேன். அவருக்கு எந்த சட்டம் உள்ளதோ அதே சட்டம்தான் எனக்கும் உள்ளது. சட்டம் என்பது மக்களுக்காகத்தான். சட்டத்துக்காக மக்கள் இல்லை. மக்களுக்கு நன்மை கிடைப்பதை செயல்படுத்துவதுதான் மக்களாட்சி.

மாநில அந்தஸ்து விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் நிலை என்ன? எனது அலுவலகத்தில் ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்தான் அதிகம் இருப்பார்கள். 2 பேரின் உரிமைகளையும் பாதுகாக்கும் நிலையில்தான் நான் உள்ளேன். இருவரது உரிமையையும் பெற்றுத்தர வேண்டியது எனது கடமை.

புதுவைக்கு மாநில அந்தஸ்து இப்போது கிடைக்குமா? என்று சொல்ல முடியாது. மக்களுக்கு அவர்களது உரிமை கண்டிப்பாக கிடைக்கும்.

இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார்.

Next Story