தலையில் கல்லை போட்டு டிரைவர் கொலை, மது குடிக்க பணம் தராததால் தீர்த்து கட்டினேன்


தலையில் கல்லை போட்டு டிரைவர் கொலை, மது குடிக்க பணம் தராததால் தீர்த்து கட்டினேன்
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 11:04 PM GMT)

மது குடிக்க பணம் தராததால் தலையில் கல்லை போட்டு டிரைவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

துடியலூர்,

கோவையை அடுத்த நஞ்சுண்டாபுரம் ஊராட்சி பாப்பநாயக்கன்பாளையம் மேட்டுதோட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 37). பொக்லைன் எந்திரம் டிரைவர். இவர் கடந்த 6-ந் தேதி அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து ஆனந்தகுமார் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (35), மருதாசலம் (35) ஆகியோர் ஆனந்தகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி பதிவாகி இருந்தது. இதனால் ஆனந்தகுமாருடன் தகராறில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில் ஆனந்தகுமாரை கொலை செய்தது பன்னிமடையை சேர்ந்த அருண்குமார் (37) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து அருண்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 6-ந் தேதி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை பாரில் மது குடிக்க சென்றேன். அங்கு எனது நண்பர் ஆனந்தகுமாரும் மது குடிக்க வந்தார். அவரிடம் மது குடிக்க 125 ரூபாய் வேண்டும் என்று நான் ஆனந்தகுமாரிடம் கேட்டேன். முதலில் மறுத்த அவர் நான் தொடர்ந்து கேட்டதால் 75 ரூபாய் மட்டும் கொடுத்தார்.

மதுபாட்டில் வாங்க இன்னும் 50 ரூபாய் தேவைப்படுகிறது என்று அவரிடம் மீண்டும் பணம் கேட்டேன். உடனே அவர் அங்கிருந்து செல்ல முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கீழே தள்ளி அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டேன். இதில் தலை மற்றும் முகம் சிதைந்து ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை தரதரவென இழுத்து சென்று அங்கிருந்த கோவில் அருகில் போட்டு விட்டு தப்பி சென்றேன். என்னை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story