காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வீடுகளில் வாழை, பலா மரங்களை வளர்க்க கூடாது


காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வீடுகளில் வாழை, பலா மரங்களை வளர்க்க கூடாது
x
தினத்தந்தி 9 Jan 2019 11:00 PM GMT (Updated: 9 Jan 2019 5:48 PM GMT)

காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வீடுகளில் வாழை, பலா மரங்களை வளர்க்க கூடாது என்று பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் வன கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, நாடுகாணி தாவரவியல் மையம், தேவாலா, சேரம்பாடி, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இப்பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அவை பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவது, தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன. இரவில் ஊருக்குள் புகுந்து வீடுகளை காட்டுயானைகள் முற்றுகையிடுவதால், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் காட்டுயானைகளிடம் இருந்து பாதுகாப்பாக வாழ வனத்துறையினர் பல்வேறு அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். தற்போது கூடலூர் பகுதியில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. மேலும் பருவமழைக்காலம் முடிந்து கோடை வறட்சி ஏற்பட உள்ளது.

இரவில் கடும் பனிப்பொழிவும், பகலில் நன்கு வெயிலும் காணப்படுவதால் வனப்பகுதியில் புல், செடி, கொடிகள் கருகி வருகின்றன. இதனால் பசுமையை இழக்கும் வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் ஊருக்குள் அதிகளவு வர வாய்ப்பு உள்ளது. பொதுமக்களின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் காட்டுயானைகளுக்கு பிடித்தமான வாழை, பாக்கு, பலா உள்ளிட்டவைகளை தேடி அவைகள் ஊருக்குள் வருகின்றன.

இதனால் வீடுகளின் அருகே வாழை, பலா, பாக்கு உள்ளிட்ட மரங்களை வளர்க்க வேண்டாம் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் வன கோட்டத்தில் வசிப்பவர்களின் வீடுகளில் வளர்த்துள்ள வாழை, பலா, பாக்கு மரங்களை அவர்களின் ஒப்புதலோடு வெட்டி அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர் அருகே செளுக்காடி பகுதியில் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையில் வன காப்பாளர்கள் பிரதீப்குமார், பிரகாஷ், சங்கர் உள்ளிட்ட வனத்துறையினர் பொதுமக்களின் வீடுகளில் உள்ள பலா மரத்தில் விளைந்துள்ள காய்கள், வாழை, பாக்கு மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பொதுமக்கள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத காரியத்துக்காக வீட்டை விட்டு வெளியே வரும்போது, மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வாழை, பலா, பாக்கு மரங்களை வீட்டில் வளர்க்க கூடாது. பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், தற்போது விளைந்துள்ள பலாக்காய்களை வெட்டி அகற்ற வேண்டும்.

தேயிலை தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் கூட்டமாக செல்ல வேண்டும். மேலும் தெருக்கள் மற்றும் வீடுகள் உள்ள பகுதிகளில் இரவில் நன்கு வெளிச்சம் இருக்குமாறு விளக்குகளை ஒளிர விட வேண்டும். மேலும் காட்டுத்தீ பரவாமல் தடுக்க வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story