தோகைமலை அருகே ராச்சாண்டார் திருமலையில் 17-ந்தேதி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு


தோகைமலை அருகே ராச்சாண்டார் திருமலையில் 17-ந்தேதி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Jan 2019 10:45 PM GMT (Updated: 9 Jan 2019 9:10 PM GMT)

தோகைமலைஅருகே உள்ள ராச்சாண்டார் திருமலையில் வருகிற 17-ந்தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ராச்சாண்டார் திருமலையில் வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்காக அரசு விதிகளுக்குட்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் மழை, வெயில் பாதிக்காமல் இருக்க கூடாரம் அமைக்கப்பட வேண்டும், காளை ஓடும் பகுதியின் இரண்டு புறங்களிலும் பார்வையார்கள் பாதிக்கப்படாத வகையில் உறுதியான இரும்பு சட்டங்கள் மற்றும் மரக்கட்டைகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும், காளைகள் கடைசியாக வந்தடையும் இடத்தில் அவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று விழா ஏற்பாட்டாளர் களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

பின்னர், கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை மற்றம் காவல்துறையினர் முறையாக ஆய்வு செய்து சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வரும் காளைகள் மற்றும் வீரர்கள் உரிய மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும் என்று கால்நடைபராமரிப்புத்துறை இணை இயக்குனருக்கு அறிவுரை வழங்கினார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது பொதுமக்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் உதவும் வகையில் தன்னார்வலர்கள் இருக்க வேண்டும். மாடுபிடி வீரர்களுக்கும் விழாக்குழுவினருக்கும் தனித்தனி நிறங்களில் சீருடை வழங்க வேண்டும். காளையை அடக்குவோர் 15 மீட்டர் தூரத்திற்கு திமிலை மட்டுமே பிடித்துக்கொண்டு செல்லவேண்டும். வால் மற்றும் காது போன்றவற்றைப் பிடிக்கக்கூடாது அவ்வாறு செய்யும் வீரர்களை விழாக்குழுவினர் உடனடியாக காவல்துறையினரின் உதவியோடு வெளியேற்ற வேண்டும்.

போட்டி நடைபெறும் இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பட்சத்தில், உடனடி சிகிச்சை அளிக்கும் பொருட்டும். மருத்துவர்களும், அவசர ஊர்திகளும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும், அனைவருக்கும் தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் அன்பழகன் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிற்றரசு, சுகுமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஹிலாகித்அஹமது, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மணிமாறன், வட்டாட்சியர் சுரேஷ் உள்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். 

Next Story