அமைச்சரவை கூட்டம் ரத்து: நாராயணசாமி– நமச்சிவாயம் டெல்லி பயணம்


அமைச்சரவை கூட்டம் ரத்து: நாராயணசாமி– நமச்சிவாயம் டெல்லி பயணம்
x
தினத்தந்தி 10 Jan 2019 5:00 AM IST (Updated: 10 Jan 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்றதையடுத்து அமைச்சரவை கூட்டம் ரத்துசெய்யப்பட்டது. இருந்தபோதிலும் பொங்கல் பண்டிகைக்கு பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

புதுச்சேரி,

பொங்கல் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து ரேசன்கார்டுதாரர்களுக்கும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்க முதல்–அமைச்சர் நராயணசாமி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் ஏற்கனவே உள்ள விதிகளை சுட்டிக்காட்டிய கவர்னர் கிரண்பெடி அனைவருக்கும் இலவச பொருட்கள் வழங்க அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அதேநேரத்தில் சிவப்பு ரேசன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பணத்தை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த அனுமதி அளித்தார்.

சிவப்பு ரேசன்கார்டுதாரர்களுக்கு மட்டும் இதை வழங்கினால் மஞ்சள்ரேசன் கார்டு வைத்திருப்பவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று ஆட்சியாளர்கள் கருதினார்கள். இதற்கிடையே தமிழகத்தில் பொங்கல் பொருட்களுடன் தலா ரூ.1000 வழங்கப்பட்டது புதுவை பொதுமக்களிடம் எதிர்பார்ப்பினை அதிகமாக ஏற்படுத்தி உள்ளது.

எனவே அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு புதுவை அரசு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவு செய்வதற்காக நேற்று புதுவை அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க கட்சி மேலிடத்தின் அவசர அழைப்பின்பேரில் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி சென்றுவிட்டார். அதேபோல் சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் கலந்துகொள்ளும் விதமாக முதல்–அமைச்சர் நாராயணசாமியும் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

எனவே நேற்று நடைபெறுவதாக இருந்த அமைச்சரவை கூட்டமும் ரத்துசெய்யப்பட்டது. இந்தநிலையில் பொங்கல் பரிசு வழங்குவதற்காக அரசு சார்பில் கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதாவது சிவப்பு ரேசன்கார்டுதாரர்களுக்கு ஒரு மாதத்துக்கான இலவச அரிசிக்கான தொகை ரூ.600 உடன் பொங்கல் பொருட்களுக்கான தொகை ரூ.135 சேர்த்து 735 ஆக வங்கிக்கணக்கில் சேர்க்கவும், மஞ்சள் ரேசன்கார்டுதாரர்களுக்கு ஒரு மாத இலவச அரிசிக்கான தொகை ரூ.300 உடன் பொங்கல் பொருட்களுக்கான தொகை ரூ.135–ஐ சேர்த்து ரூ.435 வழங்க கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதற்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் பொங்கல் பரிசுத்தொகைகள் அவரவர் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.


Next Story