லாரியின் 15 டயர்கள் பஞ்சரானதால் பெருமாள் சிலையை பெங்களூருவுக்கு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லாரியின் 15 டயர்கள் பஞ்சரானதால் பெருமாள் சிலையை பெங்களூருவுக்கு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செங்கம்,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டையில் 64 அடி உயரமும், 24 அடி அகலமும் கொண்ட பெருமாள் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரு ஈஜிபுரா எனும் இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. முழுமையாக செதுக்கப்படாததால் மிகப்பெரிய பாறையுடன் 360 டயர்கள் கொண்ட ராட்சத கார்கோ லாரியில் கொண்டு செல்லப்படுகிறது.
கொரக்கோட்டையில் இருந்து கடந்த மாதம் 7–ந் தேதி புறப்பட்ட இந்த சிலை பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்தது. 2 நாட்களுக்கு முன்பு கிரிவலப்பாதையில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செங்கம் நோக்கி சென்றது.
அன்று இரவு 7 மணியளவில் செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் சிலை வந்தடைந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட பெருமாள் சிலையை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அம்மாபாளையத்தில் இருந்து சிலை புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.
அப்போது லாரியில் பொருத்தப்பட்டுள்ள 360 டயர்களில் 15 டயர்கள் திடீரென பஞ்சரானது. இதற்கான மாற்று டயர்கள் மும்பையில் இருந்து வர வேண்டி உள்ளது. எனவே இந்த டயர்கள் கொண்டு வரப்பட்டு லாரியில் பொருத்திய பிறகு தான் மீண்டும் சிலையின் பயணம் தொடரும். இதற்கு இன்னும் 2 நாட்களாகும் என்று கூறப்படுகிறது.
இந்த சிலை கோணாங்குட்டை கேட், கரியமங்கலம், கொட்டக்குளம், மண்மலை கிராமங்கள் வழியாக செங்கம் செல்ல வேண்டி உள்ளது. ஏற்கனவே வந்தவாசியில் இருந்து பெருமாள் சிலையுடன் புறப்பட்ட லாரியின் டயர்கள், திருவண்ணாமலை வருவதற்குள் பல்வேறு இடங்களில் பஞ்சரானது. தற்போது அம்மாபாளையத்தில் இருந்து செங்கம் இடையே உள்ள 18 கிலோமீட்டர் சாலை குண்டும், குழியுமாகவும், மண்சாலையாகவும், 3 இடங்களில் வேகத்தடையும் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சாலையை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஆனால் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெருமாள் சிலை இந்த 18 கிலோமீட்டர் தூரத்தை கடந்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையான ஆனந்தவாடி கிராமம் வரை 30 கிலோமீட்டர் தூரம் சாலை சேதமடைந்துள்ளது. மேலும் 3 இடங்களில் பாலம் உள்ளது. இதனால் பெருமாள் சிலை திருவண்ணாமலை மாவட்டத்தை கடந்து செல்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சிலை கொண்டு செல்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து சிலை கொண்டு செல்லும் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.