சென்னையில் ரூ.73 கோடியில் நகர் நிர்வாக அலுவலக கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


சென்னையில் ரூ.73 கோடியில் நகர் நிர்வாக அலுவலக கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 11 Jan 2019 4:00 AM IST (Updated: 11 Jan 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ரூ.73 கோடியில் கட்டப்பட்ட நகர் நிர்வாக அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் 200 அலுவலக ஊழியர்களுடன் 1,640 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் நகராட்சி நிர்வாக ஆணையரகமும், சென்னை குறளகம் வளாகத்தில் 120 அலுவலக ஊழியர்களுடன் 1,100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் பேரூராட்சிகளின் இயக்ககமும், போதுமான இடவசதியின்றி செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசால் 664 நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்ய கூட்டரங்க வசதிகள் இல்லாததால், பிற துறை அலுவலக ஆய்வு கூட்டரங்கில் ஒவ்வொரு முறையும் கூட்டங்கள் நடக்கிறது.

நகர் நிர்வாக அலுவலகம்

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்ககம் அனைத்து வசதிகளுடன் தனித்து இயங்கக்கூடிய வகையில், சென்னை சாந்தோம் எம்.ஆர்.சி. நகரில் 11 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 11 தளங்களுடன், ரூ.73 கோடியே 8 லட்சம் மதிப்பில் நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகங்களை உள்ளடக்கிய நகர் நிர்வாக அலுவலக வளாக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். குத்துவிளக்கு ஏற்றியும், கல்வெட்டை திறந்து வைத்தும் அலுவலக செயல்பாட்டை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அதன் பிறகு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 194 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கும் வகையில் 7 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பின்னர் தலைமைச் செயலகம் புறப்பட்டு சென்றார்.

மென்பொருள் பயன்பாட்டு திட்டம்

அங்கு நடந்த நிகழ்ச்சியில், நிதித்துறை சார்பில் ரூ.288 கோடியே 91 லட்சம் மதிப்பில், அரசு அலுவலகங்களில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் பயன்பாட்டு திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 2 தொகுப்புகளாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் தொகுப்பில் சேலம், தேனி, விழுப்புரம், ஈரோடு, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, விருதுநகர், காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், சிவகங்கை, திருவாரூர் ஆகிய மாவட்ட கருவூலங்கள் மற்றும் சம்பள கணக்கு அலுவலகங்களான தலைமை செயலகம், சென்னை (கிழக்கு), மதுரை, சார் சம்பள கணக்கு அலுவலகமான சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் மென்பொருள் செயல்பாடு தொடங்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மதுரை, கடலூர், நீலகிரி, நாகை, அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, நெல்லை, தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் சம்பள கணக்கு அலுவலகமான டெல்லி, மதுரை ஐகோர்ட்டு, சம்பள கணக்கு அலுவலகமான சென்னை வடக்கு, சென்னை ஐகோர்ட்டு, சென்னை தெற்கு ஆகியவற்றில் 2-ம் தொகுப்பாக மென்பொருள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

பங்கேற்றவர்கள்

நிகழ்ச்சிகளில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம், கருவூலம் மற்றும் கணக்கு துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் ஜவஹர், நிதித்துறை முதன்மை செயலாளர் (செலவினம்) சித்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story