கடும் பனிப்பொழிவால் தக்காளி விளைச்சல் குறைந்தது ஈரோட்டில் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை


கடும் பனிப்பொழிவால் தக்காளி விளைச்சல் குறைந்தது ஈரோட்டில் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை
x
தினத்தந்தி 11 Jan 2019 4:55 AM IST (Updated: 11 Jan 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

கடும் பனிப்பொழிவால் தக்காளி விளைச்சல் குறைந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோடு,

ஈரோட்டிற்கு கோவை, நீலகிரி, ஓசூர், தர்மபுரி, தாராபுரம், ஒட்டன்சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தக்காளியின் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைந்துவிட்டது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

இதுகுறித்து ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரி கோபால் கூறியதாவது:-

தாளவாடி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி ஈரோட்டிற்கு கொண்டு வரப்படும். ஆனால் கடந்த ஒரு வாரமாக அங்கு தக்காளி விளைச்சல் குறைந்துவிட்டது.

கடும் பனிப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் தாராபுரம், தாளவாடி ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி வரவில்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

தக்காளியின் வரத்து குறைந்துவிட்டதால் கடந்த ஒரு வாரமாக விலையும் அதிகரித்து விட்டது. நேதாஜி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் வரத்து அதிகரிக்க தொடங்கினால் மீண்டும் விலை குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story