அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு 3–ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கும் பணி முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு 3–ம் பருவ பாட புத்தகங்களை வழங்கும் பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு 3–ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக பாலக்கோடு, மாரண்டஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு 3–ம் பருவ பாடபுத்தகங்களை வழங்கும் பணியை முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி தொடங்கி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கூறியதாவது:–
தர்மபுரி மாவட்டத்தில் 2018–2019–ம் கல்வி ஆண்டில் மொத்தம் 224 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 40 ஆயிரத்து 776 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள், 96 ஆயிரத்து 16 மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 25 ஆயிரத்து 453 பேருக்கு ரூ.9.35 கோடி மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
2018–2019–ம் கல்வி ஆண்டில் தர்மபுரி மாவட்டத்தில் 411 மாணவர்களுக்கு 8 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,466 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படித்து வரும் 73 ஆயிரத்து 473 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 919 மாணவர்களுக்கு பாட புத்தகங்களும், 1 லட்சத்து 36 ஆயிரத்து 215 பேருக்கு பாடக்குறிப்பேடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 83 ஆயிரத்து 449 மாணவர்களுக்கு வண்ண சீருடைகளும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 100 மாணவர்களுக்கு புத்தகப்பைகளும் வழங்கப்பட்டுள்ளன. 19 ஆயிரத்து 544 மாணவர்களுக்கு புவியியல் வரைபடங்களும், 72ஆயிரத்து 319 மாணவர்களுக்கு காலணிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 2,800 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா கம்பளி சட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பிளஸ்–1 வகுப்பு படிக்கும் 24,243 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. 6–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் இதுவரை 68 ஆயிரத்து 705 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளும், 3–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை படிக்கும் 2 லட்சத்து 62 ஆயிரத்து 911 மாணவர்களுக்கு விலையில்லா வண்ண பென்சில்களும் வழங்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 21 ஆயிரத்து 783 மாணவ–மாணவிகளுக்கு சாதிசான்றிதழ், வருவாய் மற்றும் இருப்பிட சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.